'இண்டிகோ' விமானிகள் மூவர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு
'இண்டிகோ' விமானிகள் மூவர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு
ADDED : ஜூன் 24, 2025 03:09 AM

புதுடில்லி : 'இண்டிகோ' விமான நிறுவனத்தில் பயிற்சி விமானி ஒருவரை, சக ஊழியர்கள் மூன்று பேர் ஜாதி ரீதியாக திட்டியதால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹரியானாவின் குருகிராமை தலைமையிடமாக வைத்து, 'இண்டிகோ' விமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விமானங்களை இயக்கி வருகிறது.
டில்லி, மும்பை, சென்னை உட்பட முக்கிய நகரங்களில் இருந்து நாள்தோறும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட விமானங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனத்தில் ஷரண் குமார் என்பவர் பயிற்சி விமானியாக பணிபுரிந்து வருகிறார்.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவரை, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் மூன்று பேர் ஜாதி ரீதியாக அவதுாறாக பேசியதாக புகார் எழுந்துள்ளது.
தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து தந்தை அசோக்குமாரிடம், ஷரண் குமார் தெரிவித்தார். அவர் இண்டிகோ நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள் மீது போலீசில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து அசோக்குமார் கூறியதாவது:
என் மகனுடன் பணியாற்றும் தபஸ் டே, மணீஷ் சஹானி, ராகுல் பாட்டீல் ஆகியோர் ஜாதி ரீதியாக என் மகனை பல நாட்களாக அவதுாறாக பேசி வந்துள்ளனர். விமானி அறையில் உட்காரவோ, விமானத்தை இயக்கவோ தகுதியற்றவர் எனக் கூறி அவமதித்துள்ளனர்.
வேலை கிடைத்தும், சம்பள உயர்வோ, விடுப்போ எதுவும் கொடுக்காமல் அலைக்கழித்துள்ளனர். இதனால், என் மகன் மன உளைச்சலுக்கு ஆளானார்.
இதுகுறித்து கேட்பதற்காக நேரில் சென்ற என்னையும் அவர்கள் தரக்குறைவாக பேசினர். என் மகன் விமானம் ஓட்ட தகுதியற்றவன் என்றும், எங்கள் மூதாதையரின் செருப்பு தைக்கும் தொழிலை செய்யுமாறும் கேலி பேசினர்.
ஜாதி ரீதியான துன்புறுத்தலால், நாங்கள் மனம் உடைந்தோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது இண்டிகோ உயரதிகாரிகளிடம் என் மகன் ஷரண் புகார் அளித்தும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இண்டிகோ நிறுவன ஊழியர்கள் மூன்று பேர் மீதும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.