தேசத்துக்காக தன்னை அர்ப்பணித்தவர் சிபிஆர்; பார்லியில் மோடி புகழாரம்
தேசத்துக்காக தன்னை அர்ப்பணித்தவர் சிபிஆர்; பார்லியில் மோடி புகழாரம்
UPDATED : டிச 01, 2025 02:38 PM
ADDED : டிச 01, 2025 11:43 AM

புதுடில்லி: ''தேசத்துக்காக தன்னை அர்ப்பணித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன். எளிய பின்னணியை கொண்ட அவர், துணை ஜனாதிபதியாக உயர்ந்துள்ளது, நமது ஜனநாயகத்தின் வலிமையை காட்டுகிறது,'' என்று, ராஜ்யசபாவில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (டிச.,01) தொடங்கி, வரும் டிசம்பர் 19ம் தேதி வரை நடக்க உள்ளது. துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் முதன் முதலாக ராஜ்யசபா தலைவராக தனது பணியை தொடங்கினார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
சிபிஆருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி பேசியவதாவது: இன்றைய தினம் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு பெருமைக்குரிய தருணம். இன்று ராஜ்யசபா தலைவராக பணியை தொடங்கும் உங்களை மனதார வாழ்த்துகிறேன். அவை உறுப்பினர்கள் சார்பிலும் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது அனுபவமும் வழிகாட்டுதலும், ராஜ்யசபா சிறப்பாக செயல்படுவததற்கு உதவியாக இருக்கும். அரசியல் என்பது உங்கள் பயணத்தின் ஒரு பகுதி மட்டுமே. உங்கள் இளமைக்காலம் முதல் இப்போது வரை சமூகத்துக்கு சேவையாற்றுவது தான் முக்கிய பணியாக இருந்து வருகிறது என்பதை நான் அறிவேன். உங்கள் ஆளுமைத்திறன் என்பது, சேவை, அர்ப்பணிப்பு, பொறுமை ஆகியவற்றை எதிரொலிப்பாக அமைந்துள்ளது.
அசைவ உணவு
காசிக்கு வந்து சென்றது முதல் அசைவ உணவு உண்பதில்லை என்ற முடிவை சி.பி.ராதாகிருஷ்ணன் எடுத்துள்ளார். அசைவ உணவு உண்பது தவறு என்று நான் கூற வில்லை. ஆனால், காசியின் எம்.பி., என்கிற முறையில் அவரது முடிவை மனதார ஏற்றுக் கொள்கிறேன்.
சி.பி.ராதாகிருஷ்ணன், தன் மாணவப்பருவம் முதலே, தலைமைப்பண்பை சிறப்பாக வெளிப்படுத்தியவர். சுலபமான வழியை காட்டிலும், போராட்ட வழியே சிறந்தது என்ற கொள்கையை கொண்டவர்.
கோவை குண்டு வெடிப்பு
கோவையில் 1998ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் நீங்கள் மயிரிழையில் உயிர் தப்பினீர்கள் என்பதை நாடு அறியும். அப்படி தப்பியதை வாய்ப்பாக கருதி, நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டீர்கள். இது, உங்களது நேர்மறை செயல்பாட்டை வெளிக்காட்டுகிறது.
எமர்ஜென்சி காலத்தில் உண்மையான போர் வீரராக இருந்து பணியாற்றியவர் சிபிஆர். பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபட்டவர். அமைப்பை சிறப்பாக வழிநடத்தும் திறன் கொண்டவர். மக்களை திரட்டுவதற்காக தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பிலும் மிளிர்ந்தவர்.
எளிய பின்புலத்தில் இருந்து துணை ஜனாதிபதி வரை பதவி உயர்வு பெற்றுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனின் உயர்வு, ஜனநாயகத்தின் பலத்தை எடுத்துரைக்கிறது. நாட்டுக்கு சேவையாற்றுவதற்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன். இவ்வாறு மோடி பேசினார்.
லோக்சபா ஒத்திவைப்பு
அதேபோல், லோக்சபா கூடியதும் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் எதிர்க்கட்சி எம்பிக்கள் டில்லி குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட குறித்து விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது.
சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரிக்கை விடுத்தும், எதிர்க்கட்சி எம்பிக்கள் கேட்கவில்லை. தொடர்ந்து, அவையை நாளை (டிச.,02) காலை 11 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.

