ADDED : பிப் 25, 2024 02:41 AM
பெங்களூரு: லோக்சபா தேர்தல் வெற்றி வியூகம் வகுப்பது குறித்து ஆலோசிப்பதற்காக, பா.ஜ., மேலிட தலைவர்கள் அடுத்த வாரம் பெங்களூரு வர உள்ளனர்.
லோக்சபா தேர்தலுக்காக, சுவர் ஓவிய பிரசாரம், கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பா.ஜ., தரப்பில் கர்நாடகாவில் நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்ட பிரசார யுத்தி குறித்து தெரிவிப்பதற்காக, பா.ஜ., மேலிட தலைவர்கள் அடுத்த வாரம் பெங்களூரு வர உள்ளனர். தேர்தல் பணியை பலப்படுத்தி, உற்சாகப்படுத்துவதற்காக சில வெற்றி வியூகம் வகுக்க உள்ளனர்.
மாநிலத் தலைவர் விஜயேந்திரா, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் அமைச்சர்கள் ஈஸ்வரப்பா, கோவிந்த் கார்ஜோள், ஸ்ரீராமுலு, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கோட்டா சீனிவாச பூஜாரி உட்பட மூத்த தலைவர்களுடன் ஆலோசிக்க உள்ளனர்.
தெரு நாடகங்கள் நடத்துவது, எல்.இ.டி., திரைகள் கொண்ட நடமாடும் பிரசார ஊர்திகள் பயன்படுத்தவும் மாநிலத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
தலைவர்கள் பிரசாரத்துக்காக சிறப்பு வாகனங்களும் வடிவமைத்து வருகின்றன.
மாநில தேர்தல் அலுவலகம், ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதற்கு என தனி தனி அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளன.
இதனால், அடுத்த வாரத்தில் இருந்து, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகம் பரபரப்பாக காணப்படும்.