தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்ணால் நின்ற ரயில்கள்
தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்ணால் நின்ற ரயில்கள்
ADDED : ஜூன் 27, 2025 01:05 AM

ஹைதராபாத்: தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில், இளம்பெண் ஒருவர் காரை ரயில் தண்டவாளத்தில் அதிவேகமாக ஓட்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கொண்டக்கல் ரயில்வே கேட் -- சங்கர்பள்ளி இடையே ரயில் தண்டவாளத்தில், ஒரு பெண் நேற்று அதிகாலை காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றார்.
சங்கர்பள்ளியில் இருந்து ஹைதராபாத் நோக்கி தண்டவாளத்தில் கார் செல்வதைக் கண்ட ரயில்வே அதிகாரிகள், அந்த காரை துரத்திச் சென்றனர். ஆனால், அந்தப் பெண் காரை இன்னும் வேகமாக ஓட்டினார்.
இதனால் செய்வதறியாது திகைத்த அதிகாரிகள், அந்த வழித்தடத்தில் வந்த 15 ரயில் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை அளித்து ரயில்களை நிறுத்தினர். குறிப்பாக, பெங்களூரிலிருந்து ஹைதராபாத் சென்ற ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டன.
அதன்பின், பொது மக்களுடன் ரயில்வே ஊழியர்கள் இணைந்து காரை நிறுத்தி, அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். அவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்தப் பெண்ணை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர். அவர் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து முழு விசாரணை நடந்து வருகிறது. தண்டவாளத்தில் காரை ஓட்டிச்சென்ற பெண்ணால், 45 நிமிடங்கள் வரை ரயில் சேவைகள் ஸ்தம்பித்தன.