'உல்பா' அமைப்பின் கமாண்டர் அசாமில் சுற்றிவளைத்து கைது
'உல்பா' அமைப்பின் கமாண்டர் அசாமில் சுற்றிவளைத்து கைது
ADDED : மே 25, 2025 03:50 AM

திப்ரூகர்: தடை செய்யப்பட்ட 'உல்பா - ஐ' அமைப்பின் தளபதி ரூபம் அசோமை, அசாம் - அருணாச்சல பிரதேச எல்லையில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று கைது செய்தனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமை, தனி நாடாக அறிவிக்கக்கோரி, உல்பா எனப்படும் அசாமின் ஐக்கிய முன்னணி விடுதலைப் படை என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது.
இதன் துணை அமைப்பான, 'உல்பா - ஐ' என்ற பிரிவு, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து, இதை பயங்கரவாத அமைப்பாகக் கருதி, மத்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில், உல்பா - ஐ அமைப்பின் முக்கிய படைத்தளபதிகளில் ஒருவரான ரூபம் அசோம் என்பவர், தன் கூட்டாளிகளுடன் அசாம் - அருணாச்சல பிரதேச எல்லையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்படி அசாம் போலீசார், மத்திய ரிசர்வ் படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் உடன் இணைந்து தின்சுகியா மாவட்டத்தின் மார்கெரிட்டா என்ற வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அங்கு பதுங்கியிருந்த ரூபம் அசோமை, பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து நேற்று கைது செய்ததுடன், அவரிடம் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
கைதான ரூபம் அசோம் மீது, கடந்த 2018ல் போர்டும்சா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கர் காலிதாவை கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.