டிஜிட்டல்மயம் ஆகிறது சட்டசபை மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு துவக்கி வைத்தார்
டிஜிட்டல்மயம் ஆகிறது சட்டசபை மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு துவக்கி வைத்தார்
ADDED : ஜூன் 15, 2025 09:25 PM

புதுடில்லி:“ஜூலை மாதத்துக்குள் டில்லி சட்டசபை டிஜிட்டல்மயம் ஆக்கப்படும்,” என, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு பேசினார்.
டில்லி சட்டசபையில் நடந்த நிகழ்ச்சியில், சட்டசபையை டிஜிட்டல்மயம் ஆக்கும் பணியை, மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு துவக்கி வைத்துப் பேசியதாவது:
சட்டசபை செயல்பாடுகளில் காகிதப் பயன்பாட்டை ஒழித்து, டிஜிட்டல்மயம் ஆக்குவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின், 'ஒரு நாடு, ஒரு பயன்பாடு' இயக்கத்தின் சார்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. காகிதமில்லா திட்டத்தால் சட்டசபையில் வெளிப்படைத்தன்மை, டிஜிட்டல் பாதுகாப்பு கிடைக்கும். டில்லியின் தனித்துவமான மற்றும் சிக்கலான நிர்வாக அமைப்பைக் கருத்தில் கொண்டே, சட்டசபை செயல்பாடுகள் டிஜிட்டல்மயம் ஆக்கப்படுகிறது. டில்லி மற்ற மாநிலங்களுக்கு மாதிரி சட்டசபையாக உருவெடுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சபாநாயகர் விஜேந்தர் குப்தா பேசியதாவது:
இந்த முயற்சி ஒரு வரலாற்று மைல்கல். டில்லி சட்டசபையை பசுமையான, தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் கலாசார ரீதியாக மாற்றும் பணிகள் ஏற்கனவே நடந்து வருகின்றன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியால் இயங்கும் முதல் சட்டசபையாக டில்லி மாறிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தான், டிஜிட்டல்மயம் ஆக்கும் திட்டமும் துவக்கப்படுள்ளது. இந்த திட்டத்துக்காக மார்ச் 22ம் தேதி பார்லி., விவகாரத் துறை அமைச்சகம் மற்றும் டில்லி சட்டசபை செயலகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை செயல்படுத்த முதல் தவணையாக ஒரு கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. டில்லி சட்டசபைக்கு மின்சாரம் வழங்க, 500 கிலோ வாட் சூரியஒளி மின்சார திட்டப் பணிகளும் நடந்து வருகிறது. மழைக்கால கூட்டத்தொடருக்கு முன், சட்டசபை புதுப்பித்தல், நவீன மின் நூலகம் அமைத்தல் மற்றும் கலாசார, பாரம்பரிய தளமாக மாற்றும் பணிகள் நிறைவடையும். தேசிய ஆவணக் காப்பக உதவியுடன் சட்டசபை வளாகத்தில் அருங்காட்சியகம் மற்றும் ஊடாடும் கண்காட்சி கூடம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
சட்டசபை செயல்பாடுகள் டிஜிட்டல்மயம் ஆவதால் சுற்றுச்சூழல் மேம்பாடு மட்டுமின்றி மற்றும் நிர்வாகமும் மேம்படும். மறுசுழற்சி செய்யப்பட்ட ஆயிரம் கிலோ காகிதம் தயாரிக்க, 17 மரங்களை வெட்ட வேண்டும். பா.ஜ., ஆட்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்படுகிறது. முதலில், சூரிய சக்தி மின்சார நிலையம் அமைக்கப்பட்டது. இப்போது, காகிதமற்ற சட்டசபை உருவாகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
துணை சபாநாயகர் மோகன்சிங் பிஷ்ட், சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா, தலைமை கொறடா அபய் வர்மா மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, குஜராத்தின் ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.