அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால்
அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால்
UPDATED : மே 30, 2025 05:26 PM
ADDED : மே 30, 2025 04:55 PM

லக்னோ: அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில், வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல் நடக்கும் போது, அந்த நடவடிக்கை தொடரும். அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அதற்கு அஞ்ச மாட்டோம். இந்திய பாதுகாப்பு படையினர் தாக்குதலால் பேரழிவிற்கு உள்ளான பிறகு, பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்காக கெஞ்சியது.
உள்நாட்டு ஆயுதங்கள்
ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியாவின் உள்நாட்டு ஆயுதங்களின் சக்தியை உலகம் கண்டுள்ளது. நமது இந்திய ஆயுதங்களும் பிரம்மோஸ் ஏவுகணையும் எதிரியின் எல்லைக்குள் நுழைந்து பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இலக்குகள் தீர்மானிக்கப்பட்ட இடங்களில் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன.எதிரி எங்கிருந்தாலும், அவன் விரட்டியடிக்கப்படுவான்.
தூக்கம் இல்லாத இரவுகள்
இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு நுழைந்து, பயங்கரவாதிகள் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எதிரிக்கு தூக்கமில்லாத இரவுகளை பிரம்மோஸ் ஏவுகணை கொடுத்தது.
வேலைக்கு ஆகாது
பாகிஸ்தான் அரசு மற்றும் அரசு சாராதவர்களின் சூழ்ச்சி இனி வேலை செய்யப் போவதில்லை. பாதுகாப்புத் துறையில் பெரிய நிறுவனங்கள் உ.பி.க்கு வருகின்றன. AK203 துப்பாக்கி உற்பத்தி அமேதியில் தொடங்கியது.
பஹல்காமில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில், கான்பூரின் மகன் சுபம் திவேதியும் தனது உயிரை இழந்தார். மகள் ஐஷான்யாவின் வலியையும் கோபத்தையும் நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.