எப்போ வர போற... நீ எப்போ வர போற... நண்பன் ரெட்டிக்காக காத்திருக்கும் ஸ்ரீராமுலு
எப்போ வர போற... நீ எப்போ வர போற... நண்பன் ரெட்டிக்காக காத்திருக்கும் ஸ்ரீராமுலு
ADDED : பிப் 29, 2024 11:18 PM

பல்லாரி: முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, எப்போது பா.ஜ., பக்கம் வருவார் என்று காத்திருப்பதாக, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு கூறினார்.
பல்லாரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நான், சமீபத்தில் டில்லி சென்றபோது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினேன். ஜனார்த்தன ரெட்டி பற்றி, அமித்ஷா என்னிடம் பேசினார்.
பல்லாரி, விஜயநகராவில் கட்சியை வலுப்படுத்த அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று, எனது விருப்பத்தை கூறினேன்.
பல்லாரி, விஜயநகராவில் ஜனார்த்தன ரெட்டி சக்தி வாய்ந்த ஹீரோ. அவரை சேர்த்தால் கட்சிக்கு தான் நல்லது. மாநில தலைவர் விஜயேந்திராவிடமும், இதுபற்றி பேசி உள்ளேன். எனது நண்பர் ஜனார்த்தன ரெட்டி, எப்போது மீண்டும் பா.ஜ., வருவர் என்று காத்து இருக்கிறேன்.
அவர் தனி கட்சி ஆரம்பித்ததால், எங்களுக்குள் மனகசப்பு இருக்கலாம். ஆனால் பா.ஜ.,வுக்கு வந்தால் ஒன்றிணைந்து செயல்படுவோம். ராஜ்யசபா தேர்தலில் ஜனார்த்தன ரெட்டி, காங்கிரசை ஆதரித்தது அவரது கட்சியின் முடிவு.
பல்லாரி சிட்டிங் எம்.பி., தேவேந்திரப்பாவுக்கு, கட்சி மேலிடம் மீண்டும் 'சீட்' வழங்கினால், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எனக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியிட ஆசை உள்ளது. எந்த தொகுதி கொடுத்தாலும் போட்டியிட தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.

