'ராமர் கோவிலுக்கு எதிராக வாதம் கபில் சிபிலை அனுப்பியது யார்?'
'ராமர் கோவிலுக்கு எதிராக வாதம் கபில் சிபிலை அனுப்பியது யார்?'
ADDED : ஜன 10, 2024 12:16 AM
பெங்களூரு, : 'ராமர் கோவிலின் கதவை திறக்க, வாய்ப்பு ஏற்படுத்தியது முன்னாள் பிரதமர் ராஜிவ் என்றால், ராமர் கோவிலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதிட, கபில் சிபிலை அனுப்பியது யார்?' என பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் குறித்து, கருத்து தெரிவித்த காங்கிரசார், 'நாங்களும் ராம பக்தர்கள்தான். ராமர் கோவில் கதவை திறந்ததே நாங்கள் தான்' என்றனர்.
இதற்கு பதிலடி கொடுத்து, பா.ஜ.,வின், 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் நேற்று கூறியிருப்பதாவது:
ராம பக்தர்கள் கிராமம், கிராமமாக ராமர் கோவில் கட்டினர். ஆனால் இந்த கோவில்களை, ஹிந்து அறநிலையத்துறையில் சேர்த்து, வருவாயை திருடுவது நீங்கள். காந்தியின் ராம ராஜ்யம் கனவை, மூலையில் தள்ளியது காங்கிரஸ். ஆனால், இன்று ராமர் கோவில் கட்டி, காந்தியின் கனவுக்கு உயிர் கொடுத்தது பிரதமர் நரேந்திர மோடி அரசு.
சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்து, மக்களுக்கு ராமர் கோவில் குறித்த கனவு இருந்தது. ராஜிவ் ஆட்சி காலத்தில் ராமர் கோவிலை ஏன் கட்டவில்லை. இதை தடுத்தவர்கள் யார். ராமரின் உத்தரவை பின்பற்றி வந்திருந்தால், ராமரை வெறும் கற்பனை நபர் என, காங்கிரஸ் கிண்டல் செய்தது ஏன்.
ராமர் கோவிலின் கதவை திறக்க, வாய்ப்பு ஏற்படுத்தியது முன்னாள் பிரதமர் ராஜிவ் என்றால், ராமர் கோவிலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதிட, கபில் சிபிலை அனுப்பியது யார்.
கடந்த 70 ஆண்டுகளாக, ஹிந்துக்களின் வழிகாட்டியான ராமர் கோவில் கட்ட, காங்கிரஸ் நாள், நட்சத்திரம் பார்த்தது. இது மக்களின் நம்பிக்கைக்கு ஏற்பட்ட பாதிப்பு. ராமாயணம் எப்படி மக்கள் மனதில் இருந்ததோ, அதேபோன்று காங்கிரசாரின் பொய்களும் நாட்டு மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

