ராஜ்யசபா தேர்தலில் ஏன் இப்படி செய்தீர்கள்? சோமசேகருக்கு சுரேஷ்குமார் பரபரப்பு கடிதம்
ராஜ்யசபா தேர்தலில் ஏன் இப்படி செய்தீர்கள்? சோமசேகருக்கு சுரேஷ்குமார் பரபரப்பு கடிதம்
ADDED : பிப் 29, 2024 11:18 PM

பெங்களூரு: “ராஜ்யசபா தேர்தலில், கட்சி மாறி ஓட்டுப் போட்டதற்கு என்ன காரணம்? விளக்கம் தாருங்கள்,” என, பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகருக்கு, முன்னாள் அமைச்சர் சுரேஷ்குமார் கடிதம் எழுதிக் கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக, சோமசேகருக்கு, முகநுால் வழியாக நேற்று சுரேஷ்குமார் எழுதிய கடிதத்தில் கூறியதாவது:
நீங்கள் காங்கிரசை விட்டு விலகி, பா.ஜ.,வில் இணைந்த பின், கட்சி தலைவர்களும், தொண்டர்களும், சங் பரிவார் தலைவர்களும் உங்களை கவுரவத்துடன் நடத்தினர். அப்படி இருந்தும் ராஜ்யசபா தேர்தலில், கட்சி மாறி ஓட்டுப் போட்டது ஏன்? நாங்கள் நன்றாக நடத்தியும், ஏன் இப்படி செய்தீர்கள்?
நான் பா.ஜ., தொண்டனாக, நன்கு ஆலோசித்த பின் இந்த கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் உத்தரஹள்ளியில் எம்.எல்.ஏ., பதவிக்கு போட்டியிட்ட நாளில் இருந்தே, உங்களை நான் அறிவேன். தொகுதி பிரிக்கப்பட்ட பின், யஷ்வந்த்பூர் தொகுதியில் 2008ல் நீங்கள், எங்கள் கட்சியின் ஷோபாவை எதிர்த்துப் போட்டியிட்ட போதும், உங்களை கவனித்தேன். 2013, 2018ல் வெற்றி பெற்றீர்கள்.
அதன் பின், 2019ல் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த போது, ஆச்சரியப்பட்டவர்களில் நானும் ஒருவன். ஏனென்றால் உங்களை பற்றி எனக்கு தெரியும். நீங்கள் உட்பட, மற்றவர்களும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றீர்கள்.
எங்கள் கட்சி தொண்டர்கள், எதையும் எதிர்பார்ப்பதில்லை. தன்னிடம் இருக்கும் அனைத்தையும் கொடுப்பதே, அவர்களின் சுபாவம். அனைவரின் உழைப்பாலும், நீங்கள் சம்பாதித்த நற்பெயராலும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றீர்கள். எங்கள் அரசில் உங்களுக்கு விருப்பமான கூட்டுறவு துறை அமைச்சரானது, அனைவருக்கும் தெரியும்.
பொறுப்பு அமைச்சர்
மைசூரு போன்ற பெரிய மாவட்டத்துக்கு, உங்களை பொறுப்பு அமைச்சராக்கினர். உங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை கொடுத்தனர். அம்மாவட்ட தொண்டர்கள், உங்களிடம் காண்பித்த அன்பு, அளித்த கவுரவத்தை நான் கண்ணால் கண்டவன். நீங்களும் அதற்கு தகுந்தபடியே நடந்து கொண்டீர்கள்.
மாவட்ட தொண்டர்களிடம் உங்களை பற்றி கேட்ட போது, நல்லவிதமாக கூறினர். யாரும் தவறாக கூறவில்லை. யஷ்வந்த்பூர் தொகுதியின் பா.ஜ., நண்பர்களை கேட்ட போதும், உங்களை பாராட்டி மதிப்புடன் பேசினர்.
உங்கள் தொகுதியின் சங் பரிவார் தலைவர்களும் கூட, உங்களை சங்கத்தின் அங்கமாக கருதி, மதிப்புடன் கருத்து தெரிவித்ததை நானும் கண்டேன். நீங்கள் சென்றால் எப்படி உபசரித்தனர் என்பதும் எனக்கு தெரியும்.
எனக்கும், உங்களுக்கும் தெரிந்த காரணங்களால், 2023ல் எங்கள் கட்சியால் ஆட்சிக்கு வர முடியவில்லை. இது சகஜமான விஷயம். ஒரே கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருப்பது கஷ்டம்.
ராஜ்யசபா தேர்தல்
ஒரு எம்.எல்.ஏ., எப்போதும் ஆளுங்கட்சியிலேயே இருக்க வேண்டும் என, விரும்புவது சரியல்ல. ராஜ்யசபா தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளருக்கு எதிராக ஓட்டு போட்டீர்கள். மனசாட்சி பெயரில் ஆளுங்கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போட்டீர்கள். மனசாட்சி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்தும் வார்த்தை என்பது, உங்களுக்கும் தெரியும்.
சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆசிரியர் தொகுதி தேர்தலிலும், எங்களின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு எதிராக பிரசாரம் செய்தீர்கள். ஆளுங்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக, பல நிகழ்ச்சிகளை நடத்தினீர்கள்.
இது எங்கள் கட்சி தொண்டர்களுக்கு வருத்தம் அளித்துள்ளது. 'அவருக்கு என்ன குறை வைத்தோம்; ஏன் இப்படி நடந்து கொண்டார்' என, கேள்வி எழுப்புகின்றனர். நீங்கள் இதற்கு விளக்கமளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில்கூறியுள்ளார்.

