மேற்கு வங்க தேர்தல் முடிவுகளை தீர்மானிக்குமா ஜாதிவாரி கணக்கெடுப்பு?
மேற்கு வங்க தேர்தல் முடிவுகளை தீர்மானிக்குமா ஜாதிவாரி கணக்கெடுப்பு?
ADDED : ஜூன் 20, 2025 12:40 AM

மேற்கு வங்கத்தில், 2011 முதல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலிலும் மீண்டும் வெற்றியை பறிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, மேலும் 74 ஜாதிகளை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்.
அதிர்ச்சி
மேற்கு வங்கத்தில் உள்ள முஸ்லிம் ஓட்டுகளை கவர்வதற்கு திட்டமிட்டுள்ள முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., மம்தாவின் முடிவால் அதிர்ச்சிக்குள்ளாகிஉள்ளது.
மாநிலங்கள் ரீதியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் சூழலில், மம்தாவின் இந்த முடிவு அடுத்த தேர்தலில் அவருக்கு சாதகமாக இருக்கும் என பா.ஜ., அஞ்சுகிறது.
இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில், மேலும் 74 ஜாதிகளை சேர்ப்பது குறித்து முதல்வர் மம்தா கூறுகையில், “ஜாதி அடிப்படையிலான சேர்க்கை, மதச்சார்பற்ற தன்மையை விட சமூக மற்றும் பொருளாதார காரணிகளால் தீர்மானிக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையிலேயே, இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் மேலும் பல ஜாதிகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.
ஆனால், பா.ஜ.,வோ, 'இது, மம்தாவின் அரசியல் நாடகம். அடுத்தஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை குறிவைத்து இதுபோன்ற நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார். ஓட்டு வங்கி அரசியலுக்காக நாடகமாடும் அவருக்கு, உண்மையில் மக்கள் மீது அக்கறை இல்லை' என, குற்றஞ்சாட்டியுள்ளது.
இதனால், மேற்கு வங்கத்தில் ஜாதி தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. உயர் ஜாதியினர் மற்றும் ஹிந்துத்வா சார்ந்த வாக்காளர்களை குறிவைத்து பா.ஜ., காய்களை நகர்த்தி வரும் சூழலில், திரிணமுல் காங்கிரஸ் மதச்சார்பற்ற பாணியில் வாக்காளர்களை கவர முயற்சிக்கிறது.
இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்களில் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுவதால், வாக்காளர் சீரமைப்புகளை பாதிக்கும் மையக் கருப்பொருளாக, ஜாதி அடையாளம் அங்கு உள்ளது.
ஜாதிகள் சேர்ப்பு குறித்து மேற்கு வங்க அரசியல் ஆய்வாளர் பர்மன் ராய் கூறுகையில், “ஓ.பி.சி., பிரிவு மக்களுக்கு உண்டான சலுகைகளை கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை திரிணமுல் காங்., எடுத்து வருகிறது.
“ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான முக்கிய முயற்சியாகவும், மாநில அளவிலான அடையாள அரசியலை பிரதிபலிக்கும் விதமாகவும் இந்த நடவடிக்கை உள்ளது. ஆனால், பா.ஜ.,வோ, இதை அரசியல் நாடகம் என கருதுகிறது,” என்றார்.
மாற்றம்
மாநில மற்றும் தேசிய தேர்தல்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இடஒதுக்கீடு கொள்கைகள், ஜாதி தரவில் வெளிப்படைத்தன்மை மற்றும் அரசியல் அணிதிரட்டல் போன்றவை தேர்தல் நேரங்களில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. மேற்கு வங்கத்திலும், இந்த சூழல் தற்போது எதிரொலித்துள்ளது.
அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், இந்த ஜாதிரீதியான மாற்றம் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது அங்குள்ள அரசியல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -