பலாத்காரம் செய்த முதியவரை கூட்டாக சேர்ந்து கொன்ற பெண்கள்
பலாத்காரம் செய்த முதியவரை கூட்டாக சேர்ந்து கொன்ற பெண்கள்
ADDED : ஜூன் 11, 2025 01:54 AM

புவனேஸ்வர்: ஒடிஷாவில், தங்களை பலாத்காரம் செய்த முதியவரை, எட்டு பெண்கள் கூட்டு சேர்ந்து வெட்டிக் கொலை செய்ததுடன், தீ வைத்து எரித்தனர்.
ஒடிஷாவின் கஜபதி மாவட்டம் குய்குரி கிராமத்தை சேர்ந்த முதியவர் கம்ப மாலிக், 60. மனைவியை இழந்த இவரை, கடந்த 3ம் தேதியில் இருந்து காணவில்லை என்று குடும்பத்தினர் மோஹானா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், கிராமத்துக்கு அருகே வனப்பகுதியை ஒட்டிய மலைப்பகுதியில், பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டனர்.
இதுகுறித்து நடத்திய விசாரணையில், சில பெண்கள் சேர்ந்து முதியவரை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.
கொலை தொடர்பாக எட்டு பெண்கள் மற்றும் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
சம்பவம் குறித்து விசாரித்த போலீஸ் அதிகாரி கூறியதாவது:
குய்குரி கிராமத்தில் கணவரை இழந்த, 52 வயதான பெண்ணை மாலிக் கடந்த 3ம் தேதி பலாத்காரம் செய்துள்ளார். ஏற்கனவே மாலிக்கால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான ஏழு பெண்கள் இதை அறிந்து, அவரை கொலை செய்ய முடிவு செய்துஉள்ளனர்.
இதையடுத்து, மாலிக் வீட்டுக்கு அரிவாளுடன் சென்ற பெண்கள் கும்பல், துாங்கிக்கொண்டு இருந்தவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.
பின்னர், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் உள்ளிட்ட இரு நபர்கள் உதவியுடன், சடலத்தை வனப்பகுதி ஒட்டிய மலைக்கு எடுத்து சென்று, தீ வைத்து எரித்துள்ளனர்.
கணவரை இழந்த பெண்களை குறிவைத்து பாலியல் பலாத்காரம் செய்வதை மாலிக் வழக்கமாக வைத்திருந்தார்.
தாங்கள் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து பெண்கள் புகார் தெரிவிக்காததால், தொடர்ந்து பல பெண்களின் வாழ்க்கையை அவர் சீரழித்து உள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் இணைந்து, மாலிக்கை கொலை செய்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.