ADDED : ஜூன் 24, 2025 07:40 PM
புதுடில்லி:கட்டுமானத் தளத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் நாக்லா கெம்கரன் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவம்,24. டில்லியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
தென்கிழக்கு டில்லி ஜெய்த்பூரில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் வயரிங் வேலை செய்தார். நேற்று முன் தினம் மாலை, 3:30 மணிக்கு வேலை செய்து கொண்டிருந்த போது, மின்சாரம் பாய்ந்து சிவம் தூக்கி வீசப்பட்டார். மயங்கிக் கிடந்த சிவம், அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்தனர். சிவம் உடல், உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து, கலிந்தி கஞ்ச் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கட்டட உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரரை தேடி வருகின்றனர்.