பணி நேரத்தை 10 மணி நேரமாக்க சட்டத்திருத்தம் ஆந்திர அரசின் முடிவுக்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு
பணி நேரத்தை 10 மணி நேரமாக்க சட்டத்திருத்தம் ஆந்திர அரசின் முடிவுக்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு
ADDED : ஜூன் 08, 2025 12:30 AM
அமராவதி: ஆந்திராவில், முதலீட்டாளர்களை ஈர்க்கவும், வணிகத்தை எளிதாக்கவும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை நாளொன்றுக்கு 10 மணி நேரமாக்கும் வகையில், சட்டத்திருத்தம் மேற்கொள்ள அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில வணிகத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பணியாளர்களின் அதிகபட்ச பணி நேரத்தை உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம் சமீபத்தில் நடந்தது.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி அம்மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் பார்த்தசாரதி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஒன்பது மணிநேர வேலையை அனுமதிக்கும் சட்டப்பிரிவு-54, தற்போது ஒரு நாளைக்கு 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிரிவு 55ன் கீழ், ஐந்து மணி நேர வேலைக்கு 1 மணி நேர ஓய்வு உள்ளது. அது, இப்போது ஆறு மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, பணி நேரம் முடிந்தும் கூடுதல் நேரம் பணிபுரிய காலாண்டுக்கு 75 மணி நேரம் வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது, தற்போது 144 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் சட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த திருத்தங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் அதிக அளவில் நம் மாநிலத்திற்கு வருவர்.
இந்த தொழிலாளர் விதிகள் தொழிலாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் சாதகமாக அமையும்.
உலகமயமாக்கல் ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கிறது. உலகளாவிய விதிகளை செயல்படுத்த இந்த திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும், இரவு நேர பணிகளில் அதிக அளவில் பெண்கள் வேலை செய்ய ஏதுவாக, அமைச்சரவை இரவு நேர பணி விதிகளையும் தளர்த்தியுள்ளது.
முன்பு பெண்கள் இரவு பணிகளில் பணியாற்ற அனுமதிக்கப்படவில்லை. இப்போது அவர்கள் போக்குவரத்து வசதி, பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகளுடன் பணியாற்ற முடியும்.
நீங்கள் கூடுதலாக வேலை செய்யும்போது, வருமானம் அதிகரிக்கும். இந்த விதிகளால் பெண்கள் முறையான துறைகளில் பணியாற்ற முடியும். அவை பெண்களுக்கு பொருளாதார ரீதியாக அதிகாரம் அளிக்கின்றன. மேலும், தொழில் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆந்திர அமைச்சரவையின் இந்த முடிவுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலர் ராமகிருஷ்ணா, ''இந்த விதிகளை எதிர்க்கும் வகையில், ஜூலை 9ல் நாடு முழுதும் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. இந்த போராட்டத்தில் அனைத்து பிரிவுகளும் பங்கேற்கும்,'' என்றார்.