உலகளவில் அதிக இந்தியர்கள் வசிக்கும் டாப் 10 நாடுகள்!
உலகளவில் அதிக இந்தியர்கள் வசிக்கும் டாப் 10 நாடுகள்!
UPDATED : செப் 02, 2025 09:14 AM
ADDED : செப் 02, 2025 09:09 AM

புதுடில்லி: உலகநாடுகளில் அதிக இந்தியர்கள் வசிக்கும் டாப் 10 நாடுகள் எவை என்ற விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. சர்வதேச நாடுகளையே இந்த புள்ளி விவரங்கள் மலைக்க வைத்துள்ளன.
உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10 நாடுகளில் 3.43 கோடி இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் சரிபாதியாக இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்களும் (1,71,81,071 பேர்) வெளிநாடு வாழ் இந்தியர்களும் (1,71,75,122 பேர்) உள்ளனர்.
வேலைவாய்ப்பு, பொருளாதார தேவைகளுக்காக உலகம் முழுவதும் ஏராளமான நாடுகளில் இந்தியர்கள் சென்று வருகின்றனர். லட்சக்கணக்கானோர் பரவி இருந்தாலும் பெரும்பாலோனாரின் விருப்பம் என்பது அமெரிக்காவாக தான் இருக்கிறது.
எந்த நாடுகளில் அதிக இந்தியர்கள் வசிக்கின்றனர் என்ற புள்ளி விவரங்களும் வெளியாகி இருக்கிறது.
புலம்பெயர்ந்த இந்தியர்கள் அதிகம் வசிக்கும் டாப் 10 நாடுகள்;
அமெரிக்கா - 56. 9 லட்சம் பேர்
ஐக்கிய அரபு அமீரகம் - 38.9 லட்சம் பேர்
சவூதி அரேபியா - 27.5 லட்சம் பேர்
மலேசியா - 29.3 லட்சம் பேர்
இலங்கை - 16.1 லட்சம் பேர்
தென் ஆப்பிரிக்கா - 13.9 லட்சம் பேர்
பிரிட்டன் - 13.4 லட்சம் பேர்
கனடா - 36.1 லட்சம் பேர்
குவைத் - 10.1 லட்சம் பேர்
சிங்கப்பூர் - 4.6 லட்சம் பேர்
மேற்கண்ட 10 நாடுகளில் வளைகுடா நாடுகளில் (ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா மற்றும் குவைத்) வசிக்கும் புலம்பெயர் இந்தியர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை என்பது 76.5 லட்சம் ஆகும் (கிட்டத்தட்ட முக்கால் கோடி இந்தியர்கள்).
இதுவே மேற்கத்திய நாடுகளில் (கனடா, அமெரிக்கா,பிரிட்டன்) 66 லட்சம் பேராக உள்ளது. இவர்கள் அனைவரும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் ஆவர். இது உலகளவில் மற்ற நாடுகளில் வசிக்கும் ஒட்டுமொத்த புலம்பெயர்ந்த பூர்வீக இந்தியர்களின் எண்ணிக்கையில் 40 சதவீதம் (1.71 கோடி) ஆகும்.
இந்த நாடுகளை தவிர டிரினிடாட் மற்றும் டொபாகோவில் 5.4 லட்சம் பேரும், கயானாவில் 3.2 லட்சம் பேரும் உள்ளனர். இந்தியர்கள் பெரும்பாலும் வசிக்கும் லண்டன், சிட்னி, கோலாலம்பூர், ஜோகன்னஸ்பர்க், பெர்லின், பீஜிங், டோக்கியா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 38 இந்திய கலாசார உறவுக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
ரஷ்யாவில் அதிக புலம்பெயர் இந்தியர்கள் வசித்து வந்தாலும் அந்நாட்டில் மட்டும் இந்திய கலாசார உறவுக்குழுக்கள் அமைக்கப்படவில்லை. இந்தியர்கள் அதிகம் குடியேறி அவர்களின் பங்களிப்பு பெரும்பான்மையாக இருக்கும் 7 நாடுகளில் சர்வதேச அளவில் இந்தியர்களின் வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் வெளியுறவு அமைச்சகம் கையெழுத்திட்டு இருக்கிறது.
2024-25 நிதியாண்டில் மட்டும் வெளிநாடுகளில் இருக்கும் புலம்பெயர்ந்த இந்தியர்கள், தங்களின் வருவாயில் 135.46 பில்லியன் அமெரிக்க டாலர்களை வீடுகளுக்கு அனுப்பி இருக்கின்றனர். இது முந்தைய ஆண்டை காட்டிலும் 14 சதவீதத்திற்கும் அதிகம் என்று ரிசர்வ் வங்கி தரவு வெளியிட்டு இருக்கிறது.