ADDED : ஜன 19, 2024 01:02 AM
ஜம்மு,கடந்த 1990, ஜன., 25ல் ஜம்முவின் ராவல்போரா பகுதியில் நம் விமானப் படை வீரர்கள் ஸ்ரீநகர் விமான நிலைய பணிக்கு செல்வதற்காக காத்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் நான்கு பேர் உயிரிழந்தனர்; 40க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர்.
இந்த வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டதை அடுத்து, காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர் யாசின் மாலிக் உட்பட ஆறு பேர் மீது ஜம்மு தடா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு ஜம்மு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சம்பவத்தின் போது உடனிருந்த முன்னாள் விமானப் படை வீரர் ராஜ்வர் உமேஷ்வர் சிங் நேரில் ஆஜரானார்.
புதுடில்லியில் திஹார் சிறையில் உள்ள முக்கிய குற்றவாளியான யாசின் மாலிக் வீடியோ வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, 'சம்பவம் அன்று தான் அணிந்திருந்த அங்கியில் இருந்து துப்பாக்கியை எடுத்து வீரர்களை நோக்கி யாசின் மாலிக் சரமாரியாக சுட்டார்' என உமேஷ்வர் அடையாளம் காட்டினார்.

