மாதுசாமியை களமிறக்க எடியூரப்பா திட்டம் துமகூரு பா.ஜ., - எம்.பி., பசவராஜு கோபம்
மாதுசாமியை களமிறக்க எடியூரப்பா திட்டம் துமகூரு பா.ஜ., - எம்.பி., பசவராஜு கோபம்
ADDED : ஜன 17, 2024 01:21 AM

லோக்சபா தேர்தலில், துமகூரில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் ஆதரவாளரான மாதுசாமியை களமிறக்க திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கு தற்போதை எம்.பி., பசவராஜு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்.
கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியின் போது சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் மாதுசாமி. கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவினார்.
இவர், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளர். வரும் லோக்சபா தேர்தலில், துமகூரு தொகுதியில், மாதுசாமியை களமிக்க எடியூரப்பாவும், அவரது மகனும், மாநில பா.ஜ., தலைவருமான விஜயேந்திரா விரும்புகின்றனர்.
இதையறிந்த தற்போதைய பா.ஜ., - எம்.பி., பசவராஜ் அதிருப்தி தெரிவித்துள்ளார். தற்போது 82 வயதான அவருக்கு, கட்சி 'சீட்' தருவது சந்தேகம். இதை மனதில் கொண்டு, 'எனக்கு பின் சோமண்ணாவுக்கு சீட் வழங்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனால், கடந்த வாரம் டில்லிக்கு சோமண்ணாவை, கட்சி தலைமை வரவழைத்தது. அங்கு கட்சியின் தேசிய தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்தார். அப்போது, 'லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டாம்' என சோமண்ணாவிடம் அவர்கள் கேட்டு கொண்டதால், பசவராஜு ஏமாற்றம் அடைந்தார்.
அடுத்ததாக, மத்திய இணை அமைச்சர் ஷோபாவின் பெயரை முன்மொழிந்தார். மேலும், 'உடுப்பி - சிக்கமகளூரில், ஷோபாவின் செல்வாக்கு குறைந்து விட்டது. எனவே, அவரை இத்தொகுதியில் நிறுத்தலாம். துமகூரு லோக்சபா சீட் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, கள நிலவரம் குறித்து விளக்குவேன்' எனவும் பசவராஜு தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஷோபா, 'உடுப்பி - சிக்கமளூரில் எனது இமேஜை கெடுக்கும் வகையில், பசவராஜ் கருத்து தெரிவித்து உள்ளார். மோடி அலையால், 2014, 2019ல் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளேன். மூன்றாவது முறையாக இதே தொகுதியில் தான் போட்டியிடுவேன்' என்றார்.
கடந்த லோக்சபா தேர்தலில், துமகூரியில் காங்., ஆதரவுடன் போட்டியிட்ட ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடாவை, 13,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் பசவராஜு தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எடியூரப்பா, விஜயேந்திராவின் முடிவால், அதிர்ச்சியில் உள்ள பசவராஜு விரைவில் கட்சியின் மேலிட தலைவர்களை சந்திக்க உள்ளதாக, அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -

