யோகா உலக அமைதிக்கான வழியை காட்டுகிறது: மக்களுடன் இணைந்து யோகா செய்த பின் மோடி பேச்சு
யோகா உலக அமைதிக்கான வழியை காட்டுகிறது: மக்களுடன் இணைந்து யோகா செய்த பின் மோடி பேச்சு
ADDED : ஜூன் 21, 2025 07:38 AM

அமராவதி: ''யோகா உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. யோகா உலக அமைதிக்கான வழியை காட்டுகிறது'' என மக்களுடன் இணைந்து யோகா செய்த பின் பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப் படுகிறது. இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளில் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்.கே.கடற்கரையில் மக்களுடன் இணைந்து பிரதமர் மோடி யோகா செய்தார்.
பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நன்றி. உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. யோகா ஒட்டுமொத்த உலகத்தையும் ஒன்றிணைப்பதை பார்க்கையில் ஆச்சரியம் அளிக்கிறது. நாம் தனி மனிதர்கள் மட்டுமல்ல. இயற்கையின் அங்கம். இதனை யோகா நினைவுபடுத்துகிறது.
உடல் ஆரோக்கியம்
உலக மக்களின் அன்றாட அங்கமாக யோகா மாறி உள்ளது. யோகா உலக அமைதிக்கான வழியை காட்டுகிறது. மிகப்பெரிய மருத்துவ நிறுவனங்கள் கூட யோகா குறித்து தீவிர ஆராய்ச்சி செய்து வருகிறது.
யோகா உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. யோகா குறித்து நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.சர்வதேச யோகா தினமாக அறிவிக்க 175 நாடுகள் ஆதரவு தெரிவித்தது.
உடல் பருமன்
மன்கி பாத் நிகழ்ச்சியில் கூட உடல் பருமன் குறித்து பேசி உள்ளேன். எண்ணெய் பயன்பாடுகளை குறைக்க அறிவுறுத்தியுள்ளேன். யோகாவை நாம் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம். மனதை சமாதானப்படுத்த யோகா உதவுகிறது. மீண்டும் ஒருமுறை ஆந்திரா மக்களுக்கும், யோகாவை மேற்கொள்வதற்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.