புதுச்சேரி திருக்குறள் மன்ற விழா சாதனையாளர்களுக்கு விருது
புதுச்சேரி திருக்குறள் மன்ற விழா சாதனையாளர்களுக்கு விருது
UPDATED : ஜன 20, 2024 12:00 AM
ADDED : ஜன 20, 2024 10:20 AM
புதுச்சேரி: புதுச்சேரி திருக்குறள் மன்ற விழாவில், பல துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.புதுச்சேரி திருக்குறள் மன்றம் (புதிம) 12ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் திருவள்ளுவர் திருநாள் சிறப்பு சொற்பொழிவு விழா, சித்தன்குடி, தனியார் மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு மன்ற துணைத் தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார். பொருளாளர் செல்வகாந்தி சிறப்பு விருந்தினர்களை சிறப்பித்தார்.மன்ற தலைவர் லட்சுமி நாராயணன் நோக்க உரையாற்றினார். புதுச்சேரி மானாடெக் நிறுவன தலைவர் மனநாதன் எழுதிய திருக்குறளில் இன்றைய மேலாண்மை எனும் நுாலை, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை துணைவேந்தர் மோகன் வெளியிட்டார்.அதை முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாலச்சந்தர் பெற்றுக்கொண்டார். இதையடுத்து இருவரும் வாழ்த்துரை வழங்கினர்.இதில், தினமணி நாளிதழ் ஆசிரியர் வைத்தியநாதன் தலைமை உரை நிகழ்த்தினார். விழாவில், பத்ம ஸ்ரீ டாக்டர் நளினி, இருதய நோய் நிபுணர் அரவிந்த், மூத்த வக்கீல் சிவராமன், மாற்றுத்திறனாளி அன்பு மற்றும் பாதிரியார் பிச்சைமுத்து ஆகியோருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.விருதுகளை முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து வழங்கினார். தொடர்ந்து, திருவள்ளுவர் திருநாள் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. முன்னதாக, திருக்குறள் பரப்பு ஊர்வலம், வானவில் நகர் பூங்காவில் இருந்து புறப்பட்டு, அண்ணா சாலை, காமராஜ் சாலை வழியாக சித்தன்குடி தனியார் மண்டபத்தை வந்தடைந்தது.ஊர்வலத்தை ஆச்சார்யா கல்விக்குழும மேலாண் இயக்குநர் அரவிந்தன் துவக்கி வைத்தார். மன்ற பொருளாளர் செல்வகாந்தி முன்னிலை வகித்தார்.இருதய டாக்டர் அரவிந்துக்கு பாராட்டுவிழாவில், சென்னை அப்போலோ டாக்டர் அரவிந்தின் மருத்துவ சேவையை பாராட்டி, சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவர் இருதய வால்வில் பழுது, ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு போன்ற நோய்களுக்கு, டாவி முறை போன்ற சிகிச்சைகளை, 6 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு செய்துள்ளார். இருதயநோய் சம்மந்தமான ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதி உள்ளார். இவர், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில், மருத்துவ அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

