UPDATED : ஏப் 01, 2025 12:00 AM
ADDED : ஏப் 01, 2025 08:41 AM

கோவை:
பாரதியார் பல்கலை மற்றும் மணிப்பால் பல்கலை இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆராய்ச்சி மற்றும் கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாக, கோவை பாரதியார் பல்கலை மற்றும் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள மணிப்பால் பல்கலை இடையே, ஐந்து ஆண்டு காலத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், பாரதியார் பல்கலை பதிவாளர்(பொறுப்பு) ரூபா குணசீலன் மற்றும் மணிப்பால் பல்கலை இயற்பியல், உயிரி அறிவியல் பள்ளியின் இணை டீன் ஆஷிமா பகாரியா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தம், பசுமை ஆற்றல் தீர்வுகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து, உயிரி பொருட்கள், திசு இன்ஜினியரிங், உயிரி உணர்திறன் மற்றும் ஆற்றல் சேமிப்பு ஆகியவற்றில் புதுமைகளை இயக்குவதை, நோக்கமாகக் கொண்டுள்ளது. அறிவாற்றலை பகிர்ந்து கொள்ளும் விதமாக மாணவர், ஆசிரியர் பரிமாற்றத் திட்டம் செயல்படுத்தப்படும்.
பாரதியார் பல்கலை பதிவாளர்(பொறுப்பு) ரூபா குணசீலன் கூறுகையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், புதிய கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் துறைகளில் புதுமைகளை வளர்க்கும், என்றார்.