பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறைகளை ஆராய சிறப்பு குழு கோரிய மனுவுக்கு 7 நாளில் பதில்
பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறைகளை ஆராய சிறப்பு குழு கோரிய மனுவுக்கு 7 நாளில் பதில்
UPDATED : ஏப் 02, 2025 12:00 AM
ADDED : ஏப் 02, 2025 09:14 AM

சென்னை:
பள்ளிகளில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரி, பா.ஜ., வழக்கறிஞர் அளித்த விண்ணப்பத்தின் மீது, ஒரு வாரத்தில் பதில் அளிக்கப்படும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு உறுதி அளித்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், பா.ஜ., வழக்கறிஞர் மோகன்தாஸ் தாக்கல் செய்த மனு:
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை சேர்ந்த பழனிவேலின் மகள் லியாலட்சுமி; அப்பகுதியில் உள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், எல்.கே.ஜி., படித்து வந்தார்.
கடந்த ஜனவரி, 3ம் தேதி, பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்தார். இதில், நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், கல்வித்துறை, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும்.
நடவடிக்கை
இக்குழு, மாநிலம் முழுதும், அனைத்து பள்ளிகளிலும் உள்ள பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்து, விதிமுறைகளை மீறும் பள்ளிகளை கண்டறிந்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், அரசு வழக்கறிஞர் கார்த்திக் ஜெகன்நாத் ஆஜராகினர்.
அவர்கள் வாதாடியதாவது:
விக்கிரவாண்டி பள்ளி மாணவி இறந்த வழக்கில், புலன் விசாரணை முடிவடைந்து விட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இறந்த சிறுமியின் தந்தை, விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற கோரிய வழக்கை, ஏற்கனவே உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. மனுதாரருக்கு இந்த வழக்கை தொடர உரிமையில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து நீதிபதிகள், சம்பவம் நடந்த பின், கடந்த ஜனவரி, 6ம் தேதி அரசுக்கு மனு அளித்துவிட்டு, போதிய அவகாசம் வழங்காமல், 13ம் தேதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, பொது நல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது.
மனுவில் பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளன. அடைப்பை சரி செய்யக்கூட கழிவு நீர் தொட்டியை திறந்து வைத்திருக்கலாம். அதற்கு அரசை எப்படி குறை கூற முடியும? என, கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து வழக்கை திரும்ப பெறுவதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உறுதி தரப்பட்டது
அப்போது, அரசு தரப்பில், வழக்கு வாபஸ் பெறப்பட்டதை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்து, இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும், மனுதாரரின் விண்ணப்பத்தின் மீது ஒரு வாரத்தில் உரிய பதில் அளிக்கப்படும் என, தமிழக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், மனுவை வாபஸ் பெற அனுமதித்து உத்தரவிட்டனர்.