ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் அரசு தரப்பில் தெரிவித்தது என்ன?
ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் அரசு தரப்பில் தெரிவித்தது என்ன?
UPDATED : செப் 10, 2024 12:00 AM
ADDED : செப் 10, 2024 02:24 PM
சென்னை:
தமிழகம் முழுதும் ஆசிரியர்கள், 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 10ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட பேச்சில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை அரசு வெளியிட்டுள்ளது.
போராட்டம் அறிவித்துள்ள, டிட்டோ ஜாக் எனப்படும், தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகளுடன், தொடக்க கல்வி இயக்குனர் தலைமையில், நேற்று முன்தினம் பேச்சு நடந்தது.
அவர்களிடம் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை அதிகாரிகள் விளக்கினர்.
ஏற்கப்பட்ட கோரிக்கைகள்
* கல்வி மேலாண்மை தகவல் மையம் சார்ந்த பதிவுகளை, ஆசிரியர்களை வைத்து செய்யக்கூடாது என்ற கோரிக்கை ஏற்கப்பட்டது. இதற்கென தனியாக 6,000க்கும் மேற்பட்ட நடுநிலை பள்ளிகளில், ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
*எண்ணும் எழுத்தும் திட்டத்தில், பெரும்பாலான இணையவழி செயல்பாடுகள் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
*மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை எளிதாக்க, 29,344 பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையான ஆசிரியர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டுள்ளன
* பயிற்சிகளுக்கு ஆசிரியர்களை கருத்தாளர்களாக பயன்படுத்தக் கூடாது என்ற கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது
* போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீசார் வழக்கு பதிவு செய்து, நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கையில் உள்ள ஆசிரியர்களின் பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்
* உயர் கல்வி படித்த 4,500 பேருக்கு பதவி உயர்வுக்கான பின்னேற்பு அனுமதி வழங்கும் கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது
* 58 மாவட்ட கல்வி அலுவலகங்களில், பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் தோற்றுவிக்க, தற்போதைய நிலையில் தேவை எழவில்லை. மற்ற கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.