'மத்திய அமைச்சர் பதவி கேட்டு நெருக்கடி கொடுக்க மாட்டேன்': முன்னாள் முதல்வர் குமாரசாமி
'மத்திய அமைச்சர் பதவி கேட்டு நெருக்கடி கொடுக்க மாட்டேன்': முன்னாள் முதல்வர் குமாரசாமி
ADDED : ஜூன் 08, 2024 03:31 AM

''மத்திய அமைச்சர் பதவி கேட்டு நெருக்கடி கொடுக்க மாட்டேன். சுதந்திரமாக செயல்படும்படி பிரதமரிடம் அனைவரும் கூறியுள்ளோம்,'' என, முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில், முன்னாள் முதல்வர் குமாரசாமி, ம.ஜ.த., வேட்பாளராக மாண்டியாவில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு டில்லி சென்ற அவர், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று, நரேந்திர மோடி, மீண்டும் பிரதமர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்தார். பின், பெங்களூரு திரும்பினார்.
இதற்கிடையில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா அழைப்பின்பேரில், நேற்று குமாரசாமி மீண்டும் டில்லி சென்றார். அங்கு நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்றார்.
மோடி பிரதமர் ஆவதற்கான, ஜனாதிபதிக்கு வழங்கும் பரிந்துரை கடிதத்தில் கையெழுத்திட்டார்.
முன்னதாக, டில்லி விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:
மத்திய அமைச்சர் பதவி கேட்டு நெருக்கடி கொடுக்க மாட்டேன். சுதந்திரமாக செயல்படும்படி பிரதமரிடம் அனைவரும் கூறியுள்ளோம். நாட்டில் நிலையான அரசு இருப்பது முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.