அண்ணாதுரை பெயரை அ.தி.மு.க., அடமானம் வைத்து விட்டது: ஸ்டாலின்
அண்ணாதுரை பெயரை அ.தி.மு.க., அடமானம் வைத்து விட்டது: ஸ்டாலின்
ADDED : ஜூன் 27, 2025 01:22 PM

திருப்பத்துார்: ''தமிழக மக்களை மதத்தால், ஜாதியால் பிளவுபடுத்த, பா.ஜ., தொடர்ந்து முயற்சித்து வருகிறது,'' என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திருப்பத்துார் அடுத்த மண்டலவாடியில் நடந்த அரசு விழாவில், பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 273.83 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை, ஒரு லட்சத்து 168 பயனாளிகளுக்கு வழங்கியும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழக மக்களை மதத்தால், ஜாதியால் பிளவுபடுத்த, பா.ஜ., தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் மக்களை பற்றி கவலைப்படாமல், மதத்திற்காக கவலைப்படுகின்றனர். இது தான் அவர்களுடைய அரசியல். 'மிஸ்டு கால்' கொடுத்தும் கட்சியை வளர்க்க முடியாமல் போனவர்கள், தங்களின் அரசியல் லாபத்திற்காக கடவுள் பெயரை, 'மிஸ் யூஸ்' செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் போலி பக்தியை, அரசியல் நாடகத்தை, இங்கு யாரும் ஏற்க மாட்டார்கள்.
தமிழகம், ஈ.வெ.ரா உருவாக்கிய மண், அண்ணாதுரை வளர்த்த மண், கருணாநிதி மீட்ட மண். தமிழகத்தில் அனைத்து மதத்தினரும், தங்கள் உரிமையோடும், பிற மதத்தினரோடும், நல்லிணக்கத்தோடும் வாழும் மண். கடந்த நான்கு ஆண்டில் தமிழகத்தில் 3,000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு, 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்ச், மசூதிகளை புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தான் நம் தி.மு.க., அரசு.
இதை எல்லாம் பார்த்து தான், மதவாத அரசியல் செய்கிறவர்களுக்கு பற்றி எரிகிறது. அவர்களால் தமிழகத்திற்கு செய்த வளர்ச்சியை பற்றி பேச முடியவில்லை; மக்களிடம் ஓட்டு கேட்க முடியவில்லை. செய்திருந்தால் தானே சொல்ல முடியும்.
தமிழகத்தில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த படாதபாடு படுகின்றனர். அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது, இந்த மண், ஈ.வெ.ரா., அண்ணாதுரையால் மேன்மை படுத்தப்பட்ட மண், கருணாநிதியால் வளர்க்கப்பட்ட மண். இப்படிபட்ட தலைவர்களை, நீங்கள் கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறீர்கள், அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது, அண்ணாதுரை பெயரில் கட்சி நடத்தும் கூட்டம்.
அண்ணாதுரை பெயரையே, அவர்கள் அடமானம் வைத்து விட்டனர். இன்றைக்கு கட்சியை அடமானம் வைத்திருப்பவர்கள், நாளைக்கு தமிழகத்தை அடமானம் வைக்க அனுமதிக்கக்கூடாது. தன்மானமுள்ள தமிழக மக்கள், இந்த மண்ணுக்கு எதிராக பின்னப்படும் சதி வலைகளின் நோக்கத்தை புரிந்து, தமிழினத்திற்கு எதிரானவர்களுக்கும், எதிரிகளுக்கும், துணை போகும் துரோகிகளுக்கும் ஒருசேர பாடம் புகட்ட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.