ADDED : ஜூலை 04, 2025 06:34 AM

கோவை: சிவகங்கை சம்பவத்தையடுத்து, போலீஸ் சிறப்பு படைகள் கலைக்கப்பட்டதால், வழக்குகள் தேங்கும் வாய்ப்புள்ளது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார், போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், தனிப்படை போலீசார் தாக்கியதில் அஜித் குமார் உயிரிழந்தார்.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளின் கீழ் இயங்கும் தனிப்படைகளை கலைக்க டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார். மேலும், 'கம்புகளை தவிர்க்க வேண்டும், போராட்டம், ஆர்ப்பாட்டம் நடக்கும் இடங்களில் கம்புகளை பயன்படுத்தகூடாது, கட்டப்பஞ்சாயத்து கூடாது' போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்
கடந்த முறை சாத்தான்குளத்தில் தந்தை, மகன் போலீசாரால் கொல்லப்பட்டபோது, 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' சேர்ந்தவர்கள் தாக்கியது குறித்து சர்ச்சை எழுந்தது. அப்போது 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' திட்டத்தை நிறுத்த உத்தரவு பிறபிக்கப்பட்டு, அத்திட்டம் கைவிடப்பட்டது.
தற்போது, அஜித்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு தனிப்படை போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார் என அனைத்து சிறப்பு படைகளையும் கலைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது போலீசாரால் ஏற்படும் மரணங்களை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும். மாற்றாக சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் பணியாற்றும் பிரிவையே ரத்து செய்வது குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வழிவகுக்கும்.
தற்போது, தனிப்படைகள் கலைக்கப்பட்டுள்ளதால், ஸ்டேஷன்களில் உள்ள போலீசார் அன்றாட பணிகளுக்கு நடுவில் இது போன்ற தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு குற்றங்கள் வேரோடு அழிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
சிலர் செய்யும் தவறுகளுக்கு பல மாவட்டம், மாநகர்களில் குற்றச்செயல்களை தடுக்க பெரிதும் உதவியாக இருந்து வந்த தனிப்படைகளை கலைத்ததால், வழக்குகள் தேங்கும் வாய்ப்பு உள்ளதோடு, குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.