அ.தி.மு.க.,வை விமர்சிக்காமல் மோடி அரசை வில்லனாக்கி பிரசாரம்
அ.தி.மு.க.,வை விமர்சிக்காமல் மோடி அரசை வில்லனாக்கி பிரசாரம்
UPDATED : ஆக 29, 2025 10:39 AM
ADDED : ஜூலை 05, 2025 03:29 AM

சென்னை: அரசின் சாதனைகளை சொல்லாமல், அ.தி.மு.க.,வை விமர்சிக்காமல், மத்திய பா.ஜ., அரசை மட்டும் வில்லனாக்கி சட்டசபை தேர்தல் பிரசாரத்தை, தி.மு.க., துவங்கியுள்ளது.
வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசார இயக்கத்தை, ஜூலை 1ல் தி.மு.க., துவக்கியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள் முதல் ஓட்டுச்சாவடி முகவர்கள் வரை அனைத்து நிர்வாகிகளும், வீடு வீடாகச் சென்று, மக்களை சந்தித்து, பிரசாரம் செய்து வருகின்றனர்.
பொதுவாக, ஆளுங்கட்சி தன் ஆட்சியின் சாதனைகளை முன்வைத்தும் பிரதான எதிர்க்கட்சியை விமர்சித்தும்தான் பிரசாரம் செய்யும். ஆனால், மத்திய பா.ஜ., அரசை மட்டுமே விமர்சித்து, தேர்தல் பிரசாரத்தை தி.மு.க., துவங்கிஉள்ளது.
இதற்காக, ஆறு கேள்விகள் அடங்கிய படிவத்தை தி.மு.க., தயாரித்துள்ளது. அதை மக்களிடம் கொடுத்து, 'ஆம், இல்லை' என பதிலை பெற்று வருகின்றனர்.
எந்த நெருக்கடியான சூழலிலும், தமிழகத்தின் மண், மொழி, மானம் காப்பாற்றப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா?
கல்வி நிதி, மாநில வளர்ச்சிக்கான நிதிப்பகிர்வு, நியாயமற்ற தொகுதி மறுவரையறை, 'நீட்' போன்ற கொடுமையான நுழைவுத் தேர்வுகள் போன்றவற்றில் இருந்து, நம் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமா?
டில்லியின் அதிகாரத்திற்கு அடிபணியாமல், தமிழகத்தின் உரிமையை காக்கும் முதல்வர் தான் நம் மாநிலத்தை ஆள வேண்டுமா?
இம்மூன்று கேள்விகளும், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசை, தமிழக மக்களின் வில்லனாக காட்டும் வகையில் கேட்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படியே பொதுமக்களிடம் தி.மு.க.,வினர் வற்புறுத்தி வருகின்றனர்.