டில்லி உஷ்ஷ்ஷ்: தி.மு.க..,வை தோற்கடிக்க பா.ஜ., திட்டம்: வெற்றி நிச்சயம்!
டில்லி உஷ்ஷ்ஷ்: தி.மு.க..,வை தோற்கடிக்க பா.ஜ., திட்டம்: வெற்றி நிச்சயம்!
ADDED : ஜூன் 15, 2025 02:01 AM

புதுடில்லி: 'தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்' என்கிற ஒரே குறிக்கோளுடன், பா.ஜ., திட்டங்களை தீட்டி வருகிறது. அ.தி.மு.க.,வுடன் கூட்டணியும் அமைத்துள்ளது. மற்ற சிறு கட்சிகளையும், தங்கள் கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது.
சமீபத்தில், தமிழகம் வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, டில்லி திரும்பியதும் தமிழக அரசியல் குறித்து, பா.ஜ., சீனியர் தலைவர்களிடம் பேசி உள்ளார்.
'அடுத்த மாதத்திலிருந்து மத்திய அமைச்சர்கள் அடிக்கடி தமிழகத்திற்கு, 'விசிட்' செய்ய வேண்டும். பா.ஜ., கூட்டணிக்கு இப்போதிலிருந்தே தேர்தல் பிரசாரத்தை துவக்க வேண்டும்' என, உத்தரவிட்டுஉள்ளாராம்.
மேலும், '234 சட்டசபை தொகுதிகள் அடங்கிய தமிழக சட்டசபையில், குறைந்தபட்சம், 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் ஆட்சி அமைக்க முடியும். அ.தி.மு.க., - - பா.ஜ., கூட்டணி இதைவிட கூடுதலாக, 50 தொகுதிகளில் வெற்றி பெறும்' என, பிரதமரிடமும், சக அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளாராம் உள்துறை அமைச்சர்.
'ஊழலில் திளைக்கும் தி.மு.க., அரசு மீது, மக்கள் கடுப்பில் உள்ளனர். வரும், 2026 சட்டசபை தேர்தல், தி.மு.க.,விற்கு சங்கு ஊதிவிடும்' எனவும், பா.ஜ., தலைவர்களிடம் தன் கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளாராம் அமித் ஷா.
'தேர்தல் விவகாரங்களில் உள்ளதை உள்ளபடி கட்சியினரிடம் பேசும் வழக்கம் கொண்டவர் அமித் ஷா. ஆதாரம் இல்லாமல் பேசமாட்டார்; தமிழக அரசியல் குறித்து ஆய்வு அல்லது ஏதாவது ரகசிய சர்வே நடத்தியிருப்பார்' என்கின்றனர் பா.ஜ., தலைவர்கள்.