சரஸ்வதி நதி இருந்ததற்கான ஆதாரம்: ராஜஸ்தான் அகழாய்வில் கண்டுபிடிப்பு
சரஸ்வதி நதி இருந்ததற்கான ஆதாரம்: ராஜஸ்தான் அகழாய்வில் கண்டுபிடிப்பு
ADDED : ஜூன் 29, 2025 01:52 AM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடந்த அகழாய்வு பணியில், 4,500 ஆண்டுகள் பழமையான நாகரிகத்தின் அடையாளமாக, முக்கிய ஆதாரங்களை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
ராஜஸ்தானின் டீக் மாவட்டத்தில் உள்ள பஹாஜ் கிராமத்தில், கடந்த ஜனவரி முதல் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதில், குறிப்பிடத்தக்க பல கண்டுபிடிப்புகள் கிடைத்துள்ளன. குறிப்பாக, 75 அடி ஆழத்தில் புராதனமான நதிப்பாதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதை ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புராதன நதியான சரஸ்வதி ஆற்றுடன் தொல்லியல் துறையினர் தொடர்புபடுத்தி உள்ளனர்.
இந்த பண்டைய நதி அமைப்பு ஆரம்பகால மனித குடியேற்றங்களை ஆதரித்திருக்கலாம் என்றும், பஹாஜ் கிராமத்தை சரஸ்வதி நதிப்படுகை கலாசாரத்துடன் இணைத்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
இந்த அகழ்வாராய்ச்சியில், 800-க்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில், மண் பாண்டங்கள், பிராமி எழுத்துக்களின் பழமையான முத்திரைகள், தாமிர நாணயங்கள், யாக குண்டங்கள், மவுரியர் கால சிற்பங்கள், சிவன் மற்றும் பார்வதி சிலைகள், எலும்புகளால் செய்யப்பட்ட கருவிகள் உள்ளிட்டவை அடங்கும்.
இந்த அகழ்வாராய்ச்சி, ஹரப்பாவுக்கு பிந்தைய காலம், மகாபாரத காலம், மவுரியர் காலம், குஷானர் காலம் மற்றும் குப்தர் காலம் என, ஐந்து வெவ்வேறு காலகட்டங்களின் ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளன.
சமீபத்திய கண்டுபிடிப்புகள், பஹாஜ் பகுதி மத, கலாசார மற்றும் வரலாற்று பாரம்பரியத்தின் மையமாக இருந்துள்ளதை எடுத்துரைக்கின்றன.