கொரோனாவால் 4 பேர் உயிரிழப்பு; இணை நோய் என்கிறது தமிழக அரசு
கொரோனாவால் 4 பேர் உயிரிழப்பு; இணை நோய் என்கிறது தமிழக அரசு
ADDED : ஜூன் 07, 2025 12:55 AM

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்கள் இணை நோய் மற்றும் முதுமை காரணமாக இறந்ததாக, தமிழக மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து காணப்படுகிறது. மஹாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவில் பாதிப்பு காணப்படுகிறது. கொரோனாவால் இந்தாண்டில் இதுவரை 5,364 பேர் பாதிக்கப்பட்டு, 4,724 பேர் குணமடைந்துஉள்ளனர்.
ஏற்க மறுப்பு
அதேநேரம், மஹாராஷ்டிராவில் 17; கேரளாவில் 11; டில்லி, கர்நாடகாவில் தலா ஏழு பேர்; தமிழகத்தில் நான்கு பேர் உட்பட நாடு முழுதும் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் மே, ஜூன் மாதங்களில் கொரோனாவால் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஆனால், தமிழக அரசு அதை ஏற்க மறுக்கிறது.
இணை நோய்களால் பாதிக்கப்பட்டதாலும், வயது மூப்பு காரணமாகவும் இறந்துள்ளனர் என்பதால், கொரோனா இறப்பாக கருத முடியாது என, மாநில அரசு தெரிவித்துஉள்ளது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கொரோனா பாதிப்பு இல்லை.
அதேநேரம், கர்ப்பிணியர், இணை நோயாளிகள், முதியவர்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது, முக கவசம் அணிவது அவசியம். அதேபோல், அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுவதும் அவசியம்.
தீவிர பாதிப்பு
தமிழகத்தில் உயிரிழந்த நான்கு பேரும், தீவிர இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள். மேலும், முதியவர்கள். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. ஆனால், இறப்புக்கான பிரதான காரணம் கொரோனா இல்லை.
ஏனென்றால், கொரோனாவால் பாதிக்கப்படும் 99 சதவீதம் பேர், எவ்வித தீவிர பாதிப்பும் இல்லாமல் குணமடைந்து விடுகின்றனர். எனவே தான், அவர்களை கொரோனா இறப்பில் சேர்க்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
அச்சப்பட வேண்டாம்!
ஒவ்வொரு ஆண்டும் கொரோனா லேசான பாதிப்பை தான் ஏற்படுத்துகிறது. இது ஒரு சுவாச நோயாகும். கடந்த கால கொரோனா தீவிரத்தை மறந்து விடலாம். தற்போது கவலைக்குரிய ஒன்றாக இல்லை. அச்சப்பட வேண்டாம்.
- - டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா,
உலக சுகாதார நிபுணர்
பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது!
கொரோனாவின் அனைத்து துணை வகைகளும், ஒரே மாதிரியான வைரஸ் தாக்கம் கொண்டவை. இவை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதேநேரம், கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது.
- டாக்டர் அனுராக் அகர்வால்,
முதல்வர், திரிவேதி பயோசயின்சஸ் பள்ளி,
அசோகா பல்கலை, ஹரியானா.