'கடனாளியானது தான் மிச்சம்' த.வெ.க., முன்னாள் நிர்வாகி புலம்பல்
'கடனாளியானது தான் மிச்சம்' த.வெ.க., முன்னாள் நிர்வாகி புலம்பல்
ADDED : ஜூன் 01, 2025 03:42 AM

நாகப்பட்டினம் : சமூகத்தில் மாற்றத்தை எதிர்பார்த்து, த.வெ.க.,வில் களமாடினோம். கடனாளி ஆனதால், வேறு வழியின்றி தி.மு.க.,வில் இணைந்தோம் என, தி.மு.க.,வுக்கு கட்சி மாறிய த.வெ.க., பிரமுகர் கூறினார்.
நாகை மாவட்டம், திருமருகல், தெற்கு ஒன்றிய த.வெ.க., செயலராக இருந்தவர் ஜெகபர்தீன், 30. அப்பகுதி கட்சி நிர்வாகிகள் மற்றும் தன் ஆதரவாளர்களுடன் நேற்று நாகை மாவட்ட தி.மு.க., செயலர் கவுதமன் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.
அப்போது ஜெகபர்தீன் கூறுகையில், ''விஜயின் தீவிர ரசிகர்களான நாங்கள், த.வெ.க., துவங்கியதும் சமூக மாற்றம் ஏற்படும்; சிறுபான்மையினருக்கு முன்னேற்றம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், அரசியலுக்கு புதிது என்றாலும் தீவிரமாக பணியாற்றினோம்.
மாவட்ட நிர்வாகிகள் உத்தரவுப்படி நலத்திட்ட உதவிகள், அன்னதானம் என பல நிகழ்ச்சிகளுக்கு, எங்களின் தகுதிக்கு மீறி கடன் வாங்கி ஏராளமாக செலவு செய்தோம். இதனால் கடனாளியாகி விட்டேன்.
''ஆனால், விஜய் கட்சி நடத்தும் விதத்தை பார்த்தால், அவரால் தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டோம். இனியும் கட்சிக்காக கடன் வாங்கி செலவு செய்வது என்பது, என்னை போன்றவர்களை பெரும் ஆபத்துக்குள் தள்ளும் என்பதை, கால தாமதமாக உணர்ந்து கொண்டோம்.
''இனியும், அக்கட்சியை நம்பி அரசியல் செய்ய விருப்பமில்லை. இந்த விஷயங்களை, நடிகர் விஜய் கவனத்துக்கு எடுத்து செல்லலாம் என்றால், அதற்கு வாய்ப்பில்லை. அவரை சுற்றியிருக்கும் ஜால்ரா கூட்டம், என்னை போன்றவர்களை அண்ட விடவில்லை. அதனால், ஆளுங்கட்சியான தி.மு.க.,வை நோக்கி பயணப்படுகிறோம்,'' என்றார்.