/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.எஸ்.சி., நர்சிங் சேர்க்கைக்கு மூன்று வித அணுகுமுறை மாணவ, மாணவியர் பரிதவிப்பு
/
பி.எஸ்.சி., நர்சிங் சேர்க்கைக்கு மூன்று வித அணுகுமுறை மாணவ, மாணவியர் பரிதவிப்பு
பி.எஸ்.சி., நர்சிங் சேர்க்கைக்கு மூன்று வித அணுகுமுறை மாணவ, மாணவியர் பரிதவிப்பு
பி.எஸ்.சி., நர்சிங் சேர்க்கைக்கு மூன்று வித அணுகுமுறை மாணவ, மாணவியர் பரிதவிப்பு
ADDED : ஜூன் 09, 2024 02:59 AM
பி.எஸ்.சி., நர்சிங் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை மூன்று விதமான அணுகுமுறை கடைபிடிக்கப்படுவதால், புதுச்சேரி மாணவ மாணவியர் பரிதவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் நர்சிங் கல்லுாரிகளில் கடந்த காலங்களில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது.
இந்தாண்டு நுழைவு தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என, சுகாதாரத் துறை அறிவித்து உள்ளது.
நர்சிங் படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆன்லைனில் நாளை 10ம் தேதி முதல் 25ம் தேதி வரை www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் வினியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பி.எஸ்.சி., நர்சிங் மாணவர் சேர்க்கைக்கு மூன்று விதமாக அணுகுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவ, மாணவியர் பரிதவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து பெற்றோர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'சென்டாக் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர பொது நுழைவு தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
அதே வேளையில் இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரியில் உள்ள பி.எஸ்.சி., சுய நிதி இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் மதர்தெரசா பட்டமேற்படிப்பு மையத்தில் உள்ள பி.எஸ்.சி., சுயநிதி ஒதுக்கீட்டு இடங்கள், என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டு இடங்களுக்கு யூ.ஜி., நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, தனியார் நர்சிங் கல்லுாரி நிர்வாக இடங்களுக்கு தனியாக நுழைவு தேர்வு நடத்தி, சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
ஒரே படிப்பிற்கு இப்படி மூன்று விதமாக மாணவர் சேர்க்கை அணுகுமுறை கடை பிடிக்கப்படுவது, வினோதமாக உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு கூட நீட் தேர்வு என்று ஒரே ஒரு நுழைவு தேர்வு மட்டுமே சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. நர்சிங் படிப்பிற்கு மட்டும் ஏன் மூன்று வித மாணவர் சேர்க்கை கடைபிடிக்கப்படுகிறது.
இந்த தவறான மாணவர் சேர்க்கை அணுகுமுறையை புதுச்சேரி அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். புதுச்சேரி அரசு நடத்தும் பொது நுழைவு தேர்வினை மட்டும், அரசு ஒதுக்கீடு, சுய நிதி இடங்கள், நிர்வாக இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு கருத்தில் கொள்ள வேண்டும். மற்ற நுழைவு தேர்வுகளை அரசு கைவிட வேண்டும்' என்றனர்.