/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காமாட்சியம்மன் கோவில் வீதி வீடு வாரிசுதாரர்களிடம் ஒப்படைப்பு
/
காமாட்சியம்மன் கோவில் வீதி வீடு வாரிசுதாரர்களிடம் ஒப்படைப்பு
காமாட்சியம்மன் கோவில் வீதி வீடு வாரிசுதாரர்களிடம் ஒப்படைப்பு
காமாட்சியம்மன் கோவில் வீதி வீடு வாரிசுதாரர்களிடம் ஒப்படைப்பு
ADDED : ஜூன் 26, 2024 07:40 AM

புதுச்சேரி : வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடம் என, கூறப்பட்ட காமாட்சியம்மன் கோவில் வீதியில் உள்ள வீடு,வாடகைதாரரிடம் இருந்து மீட்டு வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதுச்சேரி காமாட்சியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி.இவர் தனது காலிமனையின் மூலம் வரும் வருமானத்தை கொண்டு வேதபுரிஸ்வரர் கோவில் முருகனுக்கு கந்தசஷ்டி விழா, வேல் வாங்கும் உற்சவத்தை நடத்த வேண்டும் என, எழுதி வைத்திருந்தார்.
காலி மனையில் அவரது வாரிசுகள் வீடு கட்டி வாடகை விட்டு அதன் மூலம் வருமானத்தை கொண்டு உற்சவம் நடத்தி வந்தனர்.
வாரிசுதாரர்கள் முத்துகுமரசாமி, கிருஷ்ணசாமி ஆகியோர் கடந்த 2004ம் ஆண்டு, புதுச்சேரி சட்டசபை ஊழியர் ஆறுமுகம், செண்பகவள்ளி தம்பதிக்கு வாடகைக்கு விட்டனர். தம்பதியினர் இது கோவிலுக்கு சொந்தமான இடம் என்பதால், வாடகையை கோவிலில் கொடுப்பதாக கூறினர்.
இதனால் வாரிசுதாரர்கள் சார்பில் வீட்டை காலி செய்து தர முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் கடந்த 2010ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இதில்,கடந்த 2018ம் ஆண்டு, செண்பகவள்ளி வீட்டை காலி செய்து ஒப்படைக்க தீர்ப்பு வழங்கப்பட்டது.
செண்பகவள்ளி தரப்பினர் சுப்ரீம் கோர்ட் வரை வழக்கு தொடர்ந்தனர். அதிலும் வீட்டை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க தீர்ப்பு வந்தது. செண்பகவள்ளி தரப்பினர் நீதிமன்றத்தில் 1 ஆண்டு, 6 மாதம் என இரு முறை கால அவகாசம் பெற்றனர். 3வது முறையாக கால அவகாசம் கேட்டபோது, 15 நாட்களுக்குள் வீட்டை காலி செய்து தர உத்தரவிடப்பட்டது.
காலக்கெடு முடிந்து விட்டதால், நீதிமன்ற அமினா மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் நேற்று காமாட்சியம்மன் கோவில் வீதியில் உள்ள வீட்டிற்கு வந்தனர். அப்பகுதி மக்கள் மற்றும் சமூக அமைப்பினர் வீட்டை காலி செய்து கோவிலிடம் ஒப்படைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு புதுச்சேரி தாசில்தார், நகராட்சி அதிகாரிகள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவை விளக்கி கூறி நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, செண்பகவள்ளி குடும்பத்தினரை வீட்டில் இருந்து வெளியேற்றி பூட்டி, வாரிதாரர்களிடம் சாவி ஒப்படைத்தனர்.