/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிரான்ஸ்பார்மர் பழுது 7 மணி நேரம் ' பவர் கட்'
/
டிரான்ஸ்பார்மர் பழுது 7 மணி நேரம் ' பவர் கட்'
ADDED : ஜூன் 14, 2024 06:04 AM
திருக்கனுார்: தேத்தாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் இயங்கிய பவர் டிரான்ஸ்பார்மர் பழுது காரணமாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று 7 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
மண்ணாடிப்பட்டு தொகுதி தேத்தாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் உள்ள இரண்டு பவர் டிரான்ஸ்பார்மர்கள் மூலம் காட்டேரிகுப்பம் மற்றும் திருக்கனுார் உட்பட பல பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி 16ம் தேதி துணை மின் நிலையத்தில் இயங்கிய பவர் டிரான்ஸ்பார்மர் ஒன்று வெடித்து சேதமடைந்தது.
இதனால், திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.
கடந்த 5 மாதங்களுக்கு முன் சேதமடைந்த பவர் டிரான்ஸ்பார்மர் இதுவரையில் சீரமைக்காத நிலையில், மற்றொரு பவர் டிரான்ஸ்பார்மர் நேற்று காலை 8:30 மணி அளவில் மின்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் போதிய பராமரிப்பு இல்லாததால் திடீரென வெடித்து பழுதடைந்தது.
இதனால் கைக்கிளப்பட்டு,செட்டிப்பட்டு,கூனிச்சம்பட்டு,மணலிபட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து, புதுச்சேரி நகரப் பகுதியில் இருந்து மின்துறை ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, காலையில் பழுதடைந்த பவர் டிரான்ஸ்பார்மரை உடனடியாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, 7:00மணி நேர மின் தடைக்கு பிறகு மாலை 3:30மணி அளவில் மீண்டும் மின்வினியோகம் வழங்கப்பட்டது.
மின் தடையால், இக்கிராம மக்கள் மற்றும் வியாபாரிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.