/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்க அலுவலகம் முற்றுகை
/
அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்க அலுவலகம் முற்றுகை
ADDED : ஜூலை 10, 2024 04:53 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்கத்தை பெண்கள் திடீர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்கத்தில், ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுபவர்கள், ரிக் ஷா தொழிலாளர்கள், முடி திருத்துவோர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும், 28 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில், 2024ம் ஆண்டு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன், வீட்டு வேலை, தையல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் பெண்கள் லாஸ்பேட்டையை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பித்த ஒரே ஒரு பெண் மட்டும், உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களின் விண்ணப்பங்கள் முறையாக ஆய்வு செய்யப்படவில்லை என தெரிகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த, 40க்கும் மேற்பட்ட பெண்கள், புதுச்சேரி அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்கத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து அதிகாரிகள், தொழிலாளர் துறை ஆணையரை சந்தித்து முறையிட சொன்னதால், அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.