/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
யாசகர் மறுவாழ்வு சுய தொழில் திட்டம் புதுச்சேரியில் விரைவில் துவக்கம்
/
யாசகர் மறுவாழ்வு சுய தொழில் திட்டம் புதுச்சேரியில் விரைவில் துவக்கம்
யாசகர் மறுவாழ்வு சுய தொழில் திட்டம் புதுச்சேரியில் விரைவில் துவக்கம்
யாசகர் மறுவாழ்வு சுய தொழில் திட்டம் புதுச்சேரியில் விரைவில் துவக்கம்
ADDED : ஜூலை 12, 2024 05:36 AM

புதுச்சேரி: யாசகர் மறுவாழ்வு தன்னிறைவு சுய தொழில் அளிக்கும் திட்டம் ஸ்மைல் என்ற பெயரில் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட உள்ளது.
புதுச்சேரி சமூக நலத்துறை, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரங்கள் அளிக்கும் துறையுடன் இணைந்து புதுச்சேரியில் யாசகர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டம் ஸ்மைல் என்ற பெயரில் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளன.
விரைவில் யாசகம் பெறுபவர்கள் குறித்து கணக்கெடுப்பு பணி மாநிலம் முழுதும் நடக்க உள்ளது. இந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள தாகூர் கலை கல்லுாரி மாணவர்களுக்கு கணக்கெடுக்கும் முறை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. தாகூர் கலைக் கல்லுாரி முதல்வர் சசி காந்த தாஸ் முன்னிலை வகித்தார்.
சமூக நலத்துறை இயக்குனர் ராகினி தலைமை தாங்கினார். தொடர்ந்து கணக்கெடுப்பு தொடர்பாக கல்லுாரி மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இத்திட்ட பணிகளுக்கான கணக்கெடுக்கும் படிவங்களை தாகூர் கலைக் கல்லுாரி முதல்வர் வழங்கினார்.
இத்திட்டத்தினை அமல்படுத்தும் முகமை நிறுவனமான சாரோன் சொசைட்டி நிறுவனம் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மறுவாழ்வு இல்லம் புதுச்சேரி கோரிமேடு தேசிய நகர்ப்புற மறுவாழ்வு இல்லத்தில் ஒரு பகுதியில் இயங்க உள்ளது.
யாசக பெறும் தொழிலை விட்டுவிட்டு கண்ணியமான தொழிலுக்கு தங்களை புனரமைத்துக் கொண்டு தன்னிறைவு வாழ இத்திட்டம் வழிவகை செய்யும்.
நிகழ்ச்சியில் சமூக நலத்துறை துணை இயக்குனர் ஆறுமுகம், கள அதிகாரி கருணாநிதி, மேல்நிலைஎழுத்தர் அசோக்குமார், சமூக இயல் துறை தலைவர், தாகூர் கல்லுாரி பேரா சிரியர்கள் எப்சிபா, ஜெனிபால சுப்ரமணியம், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் வெங்கடசாமி கலந்து கொண்டனர். சாரோன் சொசைட்டி தலைவர் மோகன் நன்றி கூறினார்.