/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
யோகா விழாவுக்கு இந்தியில் வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் கிழித்து அகற்றம்
/
யோகா விழாவுக்கு இந்தியில் வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் கிழித்து அகற்றம்
யோகா விழாவுக்கு இந்தியில் வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் கிழித்து அகற்றம்
யோகா விழாவுக்கு இந்தியில் வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் கிழித்து அகற்றம்
ADDED : மே 27, 2025 07:19 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் யோகா விழாவிற்காக இந்தியில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை தமிழர் உரிமை அமைப்பினர் கிழித்து அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசின் ஆயுஷ் நிறுவனம் சார்பில் சர்வதேச யோகா விழா, புதுச்சேரி கடற்கரை சாலையில் இன்று நடக்கிறது. விழாவில், கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.இதற்கான விளம்பர பேனர்கள் அஜந்தா சிக்னல், ராஜா சந்திப்பு, அண்ணா சிலை, காமராஜர் சிலை, இந்திரா சதுக்கம், ராஜிவ் சதுக்கம் மற்றும் கிராமப்புறங்களின் முக்கிய சாலை சந்திப்புகளில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பேனர்கள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ளன. ஆனால், தமிழில் எங்கும் விளம்பர பேனர் வைக்கப்படவில்லை. புதுச்சேரியில் சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி, வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை ஆயுஷ் நிறுவனம் பின்பற்றாமல், சர்வதேச யோகா விழா விளம்பரத்தில் தமிழை புறக்கணித்துள்ளது. இது தமிழ் ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், யோகா விழாவிற்காக சிவாஜி சிலை அருகே அரசு சார்பில் வைக்கப்பட்டிருந்த இந்தி விளம்பர பலகையில் புதுச்சேரி தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நிர்வாகிகள் இந்தி மொழியை கருப்பு மை பூசி அழித்தனர். மத்திய, மாநில அரசுகள் தமிழை புறக்கணிப்பு செய்வதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதேபோல், கடற்கரை சாலையில் இந்தியில் வைக்கப்பட்டிருந்த யோகா விழா விளம்பர பேனர்களை தமிழ் ஆர்வலர்கள் கிழித்து அகற்றினர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.