ADDED : ஜூன் 23, 2025 04:56 AM

புதுச்சேரி : அ.தி.மு.க., பொதுச் செயலாளரை அவதுாறாக சித்தரித்து கார்ட்டூன் பதிவிட்டதை கண்டித்து, அண்ணா சிலை அருகே புதுச்சேரி மாநில அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில ஜெ., பேரவை செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில செயலாளர் அன்பழகன் பேசுகையில்,தமிழக தி.மு.க., அனைத்து துறைகளிலும் தோல்வி கண்ட அரசாக உள்ளது. அதன் தவறுகளை ஆதாரப்பூர்வமாக, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் மக்களிடம் எடுத்துரைத்து வருகிறார்.
அவருடைய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க திராணியற்ற அரசு, தனது கட்சியினரை வைத்து கீழ்தரமான முறையில் அவதுாறான கார்ட்டூன்களை வெளியிட்டு அற்ப அரசியல் செய்கிறது.
இதற்கு, மேலும் தி.மு.க., தன்னை திருத்திக்கொள்ளவில்லை என்றால் புதுச்சேரி அ.தி.மு.க., சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத்தலைவர் ராஜாராமன், மாநில இணைச் செயலாளர் வீரம்மாள், நகர செயலாளர் அன்பழகன், மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள் குணசேகரன், நாகமணி, கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாநில ஜெ., பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.