/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடலில் உயிர் பலியை தடுக்க 'லைப் கார்டு'கள்... நியமனம்; போலீசாருடன் இணைந்து பணியை துவக்கினர்
/
கடலில் உயிர் பலியை தடுக்க 'லைப் கார்டு'கள்... நியமனம்; போலீசாருடன் இணைந்து பணியை துவக்கினர்
கடலில் உயிர் பலியை தடுக்க 'லைப் கார்டு'கள்... நியமனம்; போலீசாருடன் இணைந்து பணியை துவக்கினர்
கடலில் உயிர் பலியை தடுக்க 'லைப் கார்டு'கள்... நியமனம்; போலீசாருடன் இணைந்து பணியை துவக்கினர்
ADDED : ஜன 17, 2024 01:28 AM

புதுச்சேரியின் அழகிய கடற்கரை, சுற்றுலா பயணிகளின் சொர்க்கபூமியாக திகழ்கிறது.
புதுச்சேரிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள், கடற்கரைக்கு செல்வதற்கே மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
கடற்கரைக்கு செல்பவர்கள் உற்சாக மிகுதியால் கடலில் இறங்கி குளிக்கின்றனர்.
நீச்சல் தெரியாததால், கடலில் எழுகின்ற ராட்சத அலைகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
அதிகரிக்கும் உயிரிழப்பு
'ஆபத்தான கடல் பகுதி;குளிக்கக் கூடாது' என கடற்கரையில் பல இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைத்திருந்தாலும், போலீசார் விரட்டி அடித்தாலும், சுற்றுலா பயணிகள் பலர் கண்டு கொள்வதில்லை.
ஆர்வக்கோளாறு காரணமாக எச்சரிக்கையை புறக்கணித்து கடலில் இறங்கி விடுகின்றனர்.
சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களும் கடலில் குளித்து ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர்.
இதனால், புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் கடலில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
கடலில் இறங்குபவர்களை தடுத்து எச்சரிக்கவும், எதிர்பாராதவிதமாக மூழ்கி தத்தளிப்பவர்களை காப்பாற்றவும், 3 ஆண்டுகளுக்கு முன், லைப் கார்டு எனப்படும் பாதுகாப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
அவர்களுக்கு சரியாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், பலர் பணியில் இருந்து நின்று விட்டனர்.
மேலும், அவர்கள் சரியாக பணியாற்றவில்லை எனவும் புகார்கள் எழுந்தது.
அமைச்சர் உத்தரவு
இந்நிலையில், புதுச்சேரி கடற்கரை சாலையில் (ராக் பீச்) தலைமைச் செயலகம், லே கபே, பார்க் கெஸ்ட் அவுஸ் ஆகிய இடங்களுக்கு அருகில் உள்ள கடற்கரை பகுதி, பாண்டி மெரினா, பெரிய வீராம்பட்டினம் ரூபி பீச், சின்ன வீராம்பட்டினம் ஈடன் பீச், புதுக்குப்பம் பாரடைஸ் பீச் ஆகிய இடங்கள் அதிகளவில் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் குளிக்கும் பகுதிகளாக போலீஸ் துறையால் அடையாளம் காணப்பட்டன.
இந்த 7 கடற்கரையிலும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்,ஒவ்வொரு இடத்திலும் 2 ஷிப்டுகளில் 3 பேர் வீதம், பயிற்சி பெற்ற பாதுகாப்பு காவலர்கள் 42 பேரை பணியில் அமர்த்துமாறு, மீன்வளத் துறை மற்றும் சுற்றுலாத் துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் லட்சுமிநாராயணன் உத்தரவிட்டார்.
கடற்கரையில் அமைந்துள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த தகுதிவாய்ந்த இளைஞர்களை பாதுகாப்பு காவலர்களாக பணியமர்த்த முடிவு செய்யப்பட்டு, முதல்கட்டமாக 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு, பேரிடர் மேலாண்மை துறையினர் 12 நாட்களுக்கு பல்வேறு அடிப்படை பயிற்சிகளை அளித்தனர்.
பணி ஆணை வழங்கல்
முதலுதவி, கடலில் மூழ்கியவர்களுக்கு சி.பி.ஆர். எனப்படும் செயற்கை சுவாசம் அளிக்கும் பயிற்சி, தீயணைப்பு பயிற்சி, இயற்கை சீற்றங்களின்போது மீட்பு பணிகள் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி முடித்தவர்களுக்கு பணி ஆணையை, அமைச்சர் லட்சுமிநாராயணன் வழங்கினார்.
தொடர்ந்து, போலீசாருடன் இணைந்து, கடற்கரையில் பாதுகாப்பு பணியை பாதுகாப்பு காவலர்கள் நேற்று துவக்கினர்.
அடுத்தக்கட்டமாக, மேலும் 29 காவலர்களை பணிக்கு எடுக்கவும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதுமட்டுமல்லாமல், மரைன் போலீசிலும், கடல் நீச்சலில் பயிற்சி பெற்ற 40 காவலர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

