/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கலைக் குழுக்களுக்கு மீண்டும்... பராமரிப்பு தொகை; பண்பாட்டுத்துறை வழங்க முடிவு
/
கலைக் குழுக்களுக்கு மீண்டும்... பராமரிப்பு தொகை; பண்பாட்டுத்துறை வழங்க முடிவு
கலைக் குழுக்களுக்கு மீண்டும்... பராமரிப்பு தொகை; பண்பாட்டுத்துறை வழங்க முடிவு
கலைக் குழுக்களுக்கு மீண்டும்... பராமரிப்பு தொகை; பண்பாட்டுத்துறை வழங்க முடிவு
ADDED : ஜன 10, 2024 01:51 AM

புதுச்சேரி : கலைஞர்கள் நடத்தி வரும் கலைக் குழுக்களுக்கு மீண்டும் பராமரிப்பு தொகை வழங்க கலை பண்பாட்டுத் துறைமுடிவு செய்துள்ளது.
தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களின் ஒன்று கலைகள். கலைகளின் ஆன்மா அழிந்துவிடாமல் பாதுகாத்து வரும் பெருமைக்குரியவர்கள் கலைகளை நிகழ்த்தும் கலைஞர்களே என்றால் மிகையில்லை.
போதிய வருமானம் இல்லையென்றாலும், கலைகள் மீது கொண்ட காதலால், நாடக குழுக்கள், நாட்டுப்புற இசை குழுக்களை இன்றளவும் நடத்தி வருகின்றனர். சிலர் முழு நேரமாகவும், சிலர் பகுதி நேரமும் ஆத்ம திருப்திக்காக கலைக்குழுக்களை நடத்துகின்றனர். இவர்கள் வழியாகத்தான் அடுத்த தலைமுறையினருக்கும் கலைகள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
இதுபோன்று புதுச்சேரியில் கலைகள் மீது காதல் கொண்ட, கலைக்குழுக்களுக்கு பராமரிப்பு தொகையாக ஆண்டிற்கு 3 ஆயிரம் ரூபாய் கலை பண்பாட்டு துறை வாயிலாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 2014ம் ஆண்டுக்கு பிறகு இந்த பராமரிப்பு தொகை காரணம் சொல்லாமல் திடீரென நிறுத்தப்பட்டது.
கலைஞர்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருந்த கலைமாமணி விருதுகளை வழங்கி கலைப்பண்பாட்டு துறை, மாநிலத்தில் உள்ள கலைக்குழுக்களுக்கு மறுஉயிர் கொடுக்க முடிவு செய்துள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு பிறகு, கலைஞர்கள் நடத்தி வரும் கலைகுழுவிற்கு மீண்டும் பராமரிப்பு தொகை வழங்க கலை பண்பாட்டுத் துறை முடிவு செய்து பணிகளை வேகப்படுத்தி வருகிறது.
விரைவில் பராமரிப்பு தொகைக்கான விண்ணப்பமும் வழங்கப்பட உள்ளது.
குழுக்களுக்கு சிக்கல்
கலைக்குழுக்கள் சங்கங்கள் பதிவு சட்டத்தின்படி, அந்தந்த மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து, பதிவு செய்ய வேண்டும். அதன்படி மாநிலத்தில் உள்ள கலைகுழுக்கள் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் புதுச்சேரியில் கடந்த 1991ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரை 1,256 சங்கங்களும்,1996ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை 1,512 சங்கங்களும் கலைக்கப்பட்டுள்ளன.
அதாவது கடந்த 32 ஆண்டுகளில் புதுச்சேரியில் செயல்படாத 6,237 சங்கங்கள் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளன. இதில் நாடக, இசை கலைக்குழுக்களும் அடக்கம். இதனால், கலைக்குழுக்கள் பராமரிப்பு தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த கலைகுழுக்களுக்கு போதிய அவகாசம் கொடுத்து, கலைகுழுக்களுக்கு பதிவு எண் கொடுக்கவும் கலை பண்பாட்டு துறை முடிவு செய்துள்ளது.
உயர்த்தப்படுமா
கலைகுழுக்களுக்கு பராமரிப்பு தொகை மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அத்தொகை காலத்திற்கேற்ப போதுமானதாக இல்லை. கலைஞர்கள் இல்லையெனில் கலைகள் இல்லை. கலைஞர்களை இழந்ததால் தான் பல கலைகள் கால வெள்ளத்தில் அழிந்து போய்விட்டன; அழிந்தும் வருகின்றன.
எனவே, காலத்துகேற்ப கலைக்குழுக்களுக்கான பராமரிப்பு தொகையை உயர்த்துவதும் அவசியம். அத்தொகையை முதல்வர் உயர்த்தி கொடுக்க வேண்டும் என்றும் கலைஞர்கள் கோரிக்கையையும் முன் வைத்துள்ளனர்.

