/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்டாக் இலவச விண்ணப்ப விவகாரத்தில் தொடரும் குழப்பம்: முதல்வர் அறிவித்தும் நடைமுறைக்கு வரவில்லை
/
சென்டாக் இலவச விண்ணப்ப விவகாரத்தில் தொடரும் குழப்பம்: முதல்வர் அறிவித்தும் நடைமுறைக்கு வரவில்லை
சென்டாக் இலவச விண்ணப்ப விவகாரத்தில் தொடரும் குழப்பம்: முதல்வர் அறிவித்தும் நடைமுறைக்கு வரவில்லை
சென்டாக் இலவச விண்ணப்ப விவகாரத்தில் தொடரும் குழப்பம்: முதல்வர் அறிவித்தும் நடைமுறைக்கு வரவில்லை
ADDED : ஜூன் 02, 2025 01:16 AM

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உள்ள இடங்கள் சென்டாக் மூலம் உயர் கல்வி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
இந்தாண்டிற்கான சென்டாக் விண்ணப்பம் ஆன்லைனில் கடந்த 12ம் தேதி முதல் துவங்கியது. www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் மாணவ, மாணவிகள் போட்டிக் போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
இதுவரை, 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க பதிவு செய்துள்ள சூழ்நிலையில், இலவச விண்ணப்பம் தொடர்பாக தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
இந்தாண்டு அனைத்து படிப்புகளுக்கும் விண்ணப்பம் கட்டணம் பெறப்படாது. இலவசமாக விண்ணப்பிக்கலாம் என, சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
ஆனால் முதல்வரின் அறிவிப்பிக்கு மாறாக சென்டாக் படிப்புகளுக்கு விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கட்டணமில்லா விண்ணப்பம் தொடர்பாக சென்டாக் அரசுக்கு கோப்பு அனுப்பிய நிலையில் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேறுவழியின்றி அனைத்து படிப்புகளுக்கும் சென்டாக் தற்போது விண்ணப்ப கட்டணத்தை பெற்று வருகிறது.
இலவச விண்ணப்பம் விவகாரத்தில் தெளிவான முடிவு இன்னும் எட்டப்படாததே இதற்கு காரணம். புதுச்சேரி மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு கொடுப்பதில் யாருக்கும் எந்த தயக்கமும் இல்லை.
இதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச விண்ணப்பம் கொடுப்பதிலும் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்க போவதில்லை.
ஆனால் மண்ணிற்கும், மாநிலத்திற்கு சம்பந்தம் இல்லாத மாணவர்களுக்கு இலவச விண்ணப்பம் திட்டம் செயல்படுத்த வேண்டுமா என, பெரிய கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக என்.ஆர்.ஐ., மற்றும் என்.ஆர்.ஐ., ஸ்பான்சர்டு, ஓ.சி.ஐ., மற்றும் ஓ.சி.ஐ., ஸ்பான்சர்டு பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இதேபோல் நீட் அல்லாத தொழில்முறை டிகிரி, டிப்ளமோ படிப்புகளுக்கு பிற மாநில மாணவர்களுக்கு 1,500 ரூபாய், கலை அறிவியல் படிப்புகளுக்கு பிற மாநில மாணவர்களுக்கு 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவர்களுக்கும் இலவச விண்ணப்பம் திட்டம் செயல்படுத்த வேண்டுமா என்பதே சிக்கலாக உள்ளது.
தற்போது நீட் அல்லாத படிப்புகளில், தொழில்முறை டிகிரி, டிப்ளமோபடிப்புகளுக்கு விண்ணப்பிக்க எஸ்.சி., - எஸ்.டி., மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 500 ரூபாய், இதர பிரிவினருக்கு 1000 ரூபாய், நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கலை அறிவியல், வணிகவியல், நுண் கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகளுக்கு 150 ரூபாய், இதர பிரிவினருக்கு 300 ரூபாய், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
தொழில்முறை டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புளுக்கு சேர்த்து விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 500 ரூபாய், இதர பிரிவினருக்கு 1,000 ரூபாய், விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
சென்டாக் இலவச விண்ணப்பம் குறித்து அரசின் முடிவு தெரியாத நிலையில் அடுத்து எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை படிப்புகளுக்கு சென்டாக் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் மற்றொரு பக்கம் இலவச விண்ணப்பம் இந்தாண்டே செயல்படுத்தப்படும் என, புதுச்சேரி அரசு சொல்லி வருவது முரண்படாக உள்ளது.
எனவே இந்தாண்டு இலவச விண்ணப்பம் திட்டம் நடைமுறைப்படுமா அல்லது இல்லையா என தெரியாமல் உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் அரசு விரைவாக முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.