/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உயிர் பலி வாங்க காத்திருக்கும் பேனர்களால் அபாயம்! ஆட்சியாளர்கள், அதிகாரிகள் 'கப் சிப்'
/
உயிர் பலி வாங்க காத்திருக்கும் பேனர்களால் அபாயம்! ஆட்சியாளர்கள், அதிகாரிகள் 'கப் சிப்'
உயிர் பலி வாங்க காத்திருக்கும் பேனர்களால் அபாயம்! ஆட்சியாளர்கள், அதிகாரிகள் 'கப் சிப்'
உயிர் பலி வாங்க காத்திருக்கும் பேனர்களால் அபாயம்! ஆட்சியாளர்கள், அதிகாரிகள் 'கப் சிப்'
ADDED : ஜன 26, 2024 05:24 AM

புதுச்சேரி தற்போது 'பேனர்சேரி'யாக மாறி விட்டது. முன்பெல்லாம், அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்த நாளுக்கு மட்டுமே பேனர் வைப்பார்கள்.
பேனர் வைப்பவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களே பேனர்கள் வைப்பதில் ஆர்வம் காட்டியதால், சட்ட விதிகள் காற்றில் பறந்தன; கட்டுப்பாடுகளும் காணாமல் போனது. அதிகாரிகள் சிலரும் தங்கள் கடமையை செய்ய மறந்தனர்.
அதிகாரிகள் அலட்சியம்
அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் தைரியமடைந்த மற்றவர்களும், காது குத்து, காதணி விழா, கல்யாணம் என, பேனர் வைக்க துவங்கினர். அடுத்ததாக, மரண அறிவிப்பு, கருமாதி என பேனர் கலாசாரம் வரைமுறையின்றி போனது.
இவற்றின் உச்சக்கட்டமாக, நகரின் அழகை பாழ்படுத்தும் வகையில் வணிக நிறுவனங்களை சேர்ந்தவர்களில் ஆரம்பித்து, பெட்டிக் கடைக்காரர்கள் வரை விளம்பர பேனர்களை வைத்து வருகின்றனர்.மளிகை கடை, காயலான் கடை, பிரியாணி கடைக்கு கூட பல இடங்களில் பேனர் வைக்கும் அளவிற்கு நிலைமை படுமோசமாகி விட்டது.
பயம் போயே போச்சு...
குறிப்பாக, கடலுார், விழுப்புரம் போன்ற மற்ற மாவட்டங்களில் பேனர் வைப்பதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும். மேலும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆபத்தான முறையில் பேனர் வைக்க கூடாது. கண்ட இடங்களில் பேனர்கள் வைக்க கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளும் உள்ளன.
புதுச்சேரியில் எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. அனுமதி பெறாமல் வைத்தாலும் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். அப்படியே நடவடிக்கை எடுத்தாலும் உள்ளூர் அரசியல்வாதிகளை கவனித்து தடுத்து கொள்ளலாம் என, மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் எந்தவித பயமும் இல்லாமல் சகட்டுமேனிக்கு பேனர்களை வைக்கின்றனர்.
இந்த தகவல் பரவி வருவதால், வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களை சேர்ந்த பலரும் பேனர் வைப்பதற்காக புதுச்சேரியை நோக்கி படை எடுத்து வருகின்றனர்.
அதிகாரிகள் கொர்...
கவர்னர் மாளிகைக்கும், சட்டசபைக்கும், தலைமைச் செயலகத்துக்கும் செல்வதற்காக நகர வீதிகள் வழியாக 24 மணி நேரமும் சென்று வரும் அதிகாரிகள், கை கட்டி, வாய் மூடி, சட்டவிரோத பேனர்களை மவுனமாக வேடிக்கை பார்த்து கொண்டுள்ளனர்.
பொது இடங்களில் பேனர்கள் வைக்கும் விஷயத்தில் சென்னை ஐகோர்ட் பல்வேறு வழிகாட்டுதல்களையும், அறிவுறுத்தல்களையும் தமிழக அரசுக்கும், புதுச்சேரி அரசுக்கும் சேர்த்தே வழங்கியுள்ளது. ஆனால், எதை பற்றியும் புதுச்சேரி அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை.
அரசியல்வாதிகளுக்கு மட்டுமே பயந்த போலீசாரும், அதிகாரிகளும் தற்போது பேனர்கள் வைக்கும் கடைக்காரர்களுக்கும் பயந்து வெண்சாமரம் வீசுகின்றனர்.
பதில் சொல்ல வேண்டும்
அனைத்து சிக்னல்களிலும், பிரதான சாலைகளிலும் தாறுமாறாக வைக்கப்படும் பேனர்களால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்துகள் நடந்து வருகிறது. பல இடங்களில் பேனர்கள் அந்தரத்தில் காற்றில் ஊசலாடி கொண்டுள்ளன. இதனால், புதுச்சேரி மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது.
ஏற்கனவே, புதுச்சேரியில் பேனர்களால் பலர் பலியாகி உள்ளனர். இருந்தபோதும், ஆட்சியில் உள்ளவர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் தொடர்கிறது. இனியும் உயிர் பலி ஏற்பட்டால் அதிகாரிகளும், ஆட்சியாளர்களுமே பொறுப்பேற்க வேண்டும். மேலும், கோர்ட்டிலும் பதில் சொல்ல நேரிடும்.

