/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழை நிவாரணம் வழங்க இ.கம்யூ., வலியுறுத்தல்
/
மழை நிவாரணம் வழங்க இ.கம்யூ., வலியுறுத்தல்
ADDED : ஜன 09, 2024 07:06 AM

புதுச்சேரி : மழை நிவாரணம் வழங்க வேண்டுமென இ.கம்யூ., வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் மழையினால் பாவாணர் நகர், பூமியான்பேட்டை, ஜவகர் நகர், ரெயின்போ நகர், வெங்கடா நகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
வில்லியனுார், பாகூர், ஏம்பலம், நெட்டப்பாக்கம், திருக்கனுார், மண்ணாடிப்பட்டு, மதகடிப்பட்டு பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இது அரசின் மெத்தன போக்கினால் ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களுக்கு முன்பாக செய்ய வேண்டிய வாய்க்கால், ஏரி, குளம் துார்வாரப்படாததால் பாதிப்புகள் அதிகரித்து உள்ளன.
நகரப் பகுதியில் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்காக பூமியான் பேட்டை, முருங்கப்பாக்கம் வழியாக வேல்ராம்பட்டு ஏரிக்கு வாய்க்கால் அமைக்க பல கோடி ரூபாய் திட்டம் இதுவரையில் முடிக்கப்படாததால், தற்போது மழை நீரும், கழிவு நீரும் கலந்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளன.
எனவே, அரசு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ள பயிர்களுக்கும் முழுமையான நிவாரணம் வழங்கவும், போர்க்கால அடிப்படையில் வடிகால் வசதிகளை செய்திட வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

