/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பூட்டிய வீட்டிற்குள் 2 நாட்களாக மயங்கி கிடந்த மாஜி மருத்துவ அதிகாரி, அவரது மனைவி மீட்பு
/
பூட்டிய வீட்டிற்குள் 2 நாட்களாக மயங்கி கிடந்த மாஜி மருத்துவ அதிகாரி, அவரது மனைவி மீட்பு
பூட்டிய வீட்டிற்குள் 2 நாட்களாக மயங்கி கிடந்த மாஜி மருத்துவ அதிகாரி, அவரது மனைவி மீட்பு
பூட்டிய வீட்டிற்குள் 2 நாட்களாக மயங்கி கிடந்த மாஜி மருத்துவ அதிகாரி, அவரது மனைவி மீட்பு
ADDED : ஜன 27, 2024 06:45 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் பூட்டிய வீட்டிற்குள் தவறி விழுந்ததால் எழுந்திருக்க முடியாமல் கிடந்த ஓய்வு பெற்ற துணை மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கதவை உடைத்து உரிய நேரத்தில் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி, லாஸ்பேட்டை அசோக் நகர், நேதாஜி வீதியைச் சேர்ந்தவர் டாக்டர் சதிஷன், 84; சுகாதாரத்துறை ஓய்வு பெற்ற துணை மருத்துவ கண்காணிப்பாளர். இவரது மனைவி சைலஜா, 80; இவரது மகன் பைஜர் பெங்களூருவில் தங்கி வேலை செய்கிறார்.
சதிஷன் வீடு 2 நாட்களாக உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வீட்டு வேலைக்கு வந்த பெண், வீடு இரு நாட்களாக உள்பக்கமாக பூட்டி இருப்பதாகவும், உரிமையாளர் சதிஷசனுக்கு போன் செய்தும் எடுக்கவில்லை என, அவரது மகன் பைஜருக்கு தகவல் தெரிவித்தார்.
பைஜர் தனது நண்பரான லாஸ்பேட்டையில் உள்ள சதிஷ்சை விசாரிக்க அனுப்பினார். சதிஷ் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு கிடந்தது. குரல் கொடுத்தும் யாரும் வெளியே வரவில்லை. வீட்டு வாசலில் 2 நாட்கள் எடுக்காத பத்திரிக்கைகள் கிடந்தது.
உடனே லாஸ்பேட்டை புறக்காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன், உதவி சப்இன்ஸ்பெக்டர் அருள்குமார், காவலர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் முன்னிலையில் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, கடும் காய்ச்சல் காரணமாக சதிஷசன் எழுந்திருக்க முடியாமல் படுக்கை அறையில் மயங்கி கிடந்தார். அவரது மனைவி சைலஜா சமையல் அறையில் கிழே விழுந்தில் இடுப்பு எலும்பு உடைந்து எழுந்திருக்க முடியாமல் கிடப்பது தெரியவந்தது.
இருவரும் உயிருடன் இருந்தனர். விசாரணையில், 2 நாட்களுக்கு முன், சமைக்கும்போது சைலஜா வழுக்கி கீழே விழுந்ததும், அவரால் எழுந்திருக்க முடியாமல் அதே இடத்தில் கிடந்ததும், சதிஷனுக்கு கடும் காய்ச்சல் காரணமாக படுக்கையிலே மயங்கி கிடந்தது தெரிவந்தது.
வயது முதிர்ச்சி காரணமாக இருவரும் நகர்ந்து செல்ல முடியாமல் உணவு ஏதும் உட்கொள்ள முடியாமல் அப்படியே படுத்து கிடந்ததால், போன் எடுத்து பேச முடியவில்லை. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து இருவரையும் போலீசார் காப்பாற்றி ஜிப்மரில் அனுமதித்தனர்.
தற்போது இருவரும் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

