/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குளுனி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
குளுனி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : ஜூன் 21, 2025 12:48 AM

புதுச்சேரி : லாஸ்பேட்டை புனித சூசையப்பர் குளுனி மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது.
கண்காட்சிக்கு துணை முதல்வர் அருட்சகோதரி பான்சி, அருட்சகோதரி சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆலங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சாந்தி கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் பள்ளி மாணவிகளின் 190 படைப்புகள் காட்சிப் படுத்தப்பட்டன.
கணிதப் பாடத்தில் முக்கோணவியல், நிகழ்தகவு, வங்கி வட்டி கணக்கிடும் முறை, பிதாகரஸ் தேற்றம் உலகின் மொழி கணிதம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பேரழிவு உணர்வு சுவர், தானியங்கி ரயில்வேகேட் கட்டுப்பாடு அமைப்பு, பெருங்கடல் அமில மழை, பிளாஸ்டிக் ஒழிப்பு, கைரேகையை வைத்து குற்றவாளிகளை கண்டறிதல் போன்ற அறிவியல் மாதிரிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன.
மேலும், சிந்துார் ஆபரேஷன், சடலத்தை பதப்படுத்தும் முறை, இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறும் அடிப்படை உரிமைகள் போன்றவை வரலாற்றுத்துறை மூலமாகவும், கழிவு மேலாண்மை, காகித மறுசுழற்சி, நீர் மறுசுழற்சி, பேரிடர் மேலாண்மை, தொடர்பான மாதிரிகள் உயிரியல் துறை சார்பாகவும், தகவல் பாதுகாப்பு, வலைதளம் செயற்கை நுண்ணறிவு, கணினியின் தலைமுறை, அணுக்கழிவுகளை தரம் பிரிக்கும் முறை கணினி அறிவியல் துறை மூலமாகவும் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பார்வையிட்டனர்.