தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடலுார் சாலையில் சிறிய மாற்றம் செய்தால் நெரிசலுக்கு தீர்வு!கவர்னர் கைலாஷ்நாதன் களம் இறங்குவாரா?

கடலுார் சாலையில் சிறிய மாற்றம் செய்தால் நெரிசலுக்கு தீர்வு!கவர்னர் கைலாஷ்நாதன் களம் இறங்குவாரா?

கடலுார் சாலையில் சிறிய மாற்றம் செய்தால் நெரிசலுக்கு தீர்வு!கவர்னர் கைலாஷ்நாதன் களம் இறங்குவாரா?


UPDATED : ஜூலை 30, 2026 07:22 PM

ADDED : ஜூலை 30, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2026 07:22 PM ADDED : ஜூலை 30, 2026 07:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி - கடலுார் சாலையில் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ஒரு சிறிய மாற்றுப் பாதையை ஏற்படுத்தினாலே போதுமானது. இதன் மூலம் நாள்தோறும் அவதிப்படும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளுக்குப் பெருமூச்சு கிடைக்கும்.

புதுச்சேரி - கடலுார் சாலையில், ஏ.எப்.டி. மில் மற்றும் புதிய நீதிமன்ற வளாகம் அருகே ரூ. 72 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு ஜூலை 31 முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் கடலுார் சாலை முழுதுமாக மூடப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

மூச்சுமுட்டுது:: தற்போது கடலுார் வழியிலிருந்து நகரத்திற்குள் வரும் வாகனங்கள் இரண்டு வழிகளை மட்டுமே நம்பியுள்ளன. ஒன்று உப்பளம் நேதாஜி சாலை வழியாக நகரப் பகுதிக்குள் நுழைய வேண்டும். அல்லது இந்திரா சிலை வழியாக நீண்ட துாரம் சுற்றி வர வேண்டும்.

ஆனால், இந்த இரண்டு வழிகளிலுமே காலை மற்றும் மாலை வேளைகளில் வாகனங்கள் பல கிலோமீட்டர் துாரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. இதனால் கடுமையான நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளின் பொறுமை சோதிக்கப்பட்டு வருகிறது.

மாற்று பாதையில்..: ரயில்வே மேம்பாலப் பணிகள் நிறைவடைய இன்னும் 1.5 ஆண்டுகள் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது. அதுவரை பொதுமக்கள் இந்த நெரிசலில் சிக்கி விழிபிதுங்கி நிற்க முடியாது என்பதால், ஒரு தற்காலிக மாற்றுப் பாதை திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டியது அவசியம். முதலியார்பேட்டை சந்திப்பில் இருந்து ரயில்வே கேட் வரை 300 மீட்டர் தொலைவிற்கு ஏ.எப்.டி. வளாகத்தை ஒட்டி விசாலமான இடம் காலியாக உள்ளது. இந்த இடத்தை ரயில்வே கேட் வரை தற்காலிகச் சாலையாக நீட்டித்தால், ஒரே நேரத்தில் இரண்டு கார்கள் தாராளமாகச் செல்லக்கூடிய அளவிற்குச் சிறந்த மாற்றுப் பாதை வசதி கிடைக்கும்.

ஐடியா கொடுத்த கவர்னர்:: சமீபத்தில் ரயில்மேம்பாலப் பணிகளை நேரில் ஆய்வு செய்த கவர்னர் கைலாஷ்நாதன், ஏ.எப்.டி. வளாகத்தை ஒட்டியுள்ள இந்த நிலத்தைச் சாலையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற மிகச் சரியான ஆலோசனையை வழங்கினார். கவர்னர் நடைமுறைக்குச் சாத்தியமான ஆலோசனையை வழங்கிய போதிலும், துறை அதிகாரிகள் அதற்குச் செயல்வடிவம் கொடுக்காமல் தாமதித்து வருகின்றனர்.

இந்தச் சிறிய மாற்றம் மிகப்பெரிய அளவில் நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வைத் தரும். ஆனால், இத்திட்டத்தை யார் அமல்படுத்துவது என்பதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு துறையும் மாறி மாறிப் பொறுப்புகளைக் கை காட்டி வருகின்றன.

துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் திட்டம் முடங்கிக் கிடக்கும் நிலையில், ஆலோசனையை வழங்கிய கவர்னர் கைலாஷ்நாதனே, நேரடியாகக் களத்தில் இறங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை பிரிவு, போக்குவரத்துத் துறை, போக்குவரத்துப் போலீஸ், தென்னக ரயில்வே மற்றும் ஏ.எப்.டி. நிர்வாகம் ஆகிய அனைத்துத் துறைகளையும் கவர்னர் நேரில் அழைத்து ஆலோசித்துத் தகுந்த வழிகாட்டல் வழங்கினால் மட்டுமே இந்த மாற்றுப் பாதை திட்டம் உடனடியாக உயிர்பெற்று, விழிபிதுங்கி நிற்கும் நகர நெரிசலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us