ADDED : ஜூன் 01, 2024 10:48 PM

சென்னை: அனைத்து வித கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்தியாவின் தினேஷ் கார்த்திக் விலகினார்.
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டரான இவர், தனது 10 வயது முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறார். சென்னை அணிக்காக முதல் டிவிசன் போட்டிகளில் பங்கேற்ற இவரது தந்தை தான் இளம் வயது பயிற்சியாளராக இருந்துள்ளார். துவக்கத்தில் பேட்டராக களமிறங்கிய கார்த்திக், பின் தமிழக யூத் அணியில் முதன்முறையாக விக்கெட் கீப்பர் பயிற்சி மேற்கொண்டார். கடந்த 1999ல் 14 வயதுக்குட்பட்ட தமிழக அணியில் அறிமுகமானார். பின், 19 வயதுக்குட்பட்ட அணியில் (2000-2001) இடம் பிடித்தார். கடந்த 2002ல் பரோடா அணிக்கு எதிரான முதல் தர போட்டியில் விக்கெட் கீப்பராக அறிமுகமானார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 2004ல் அறிமுகமான தினேஷ் கார்த்திக், கடந்த 20 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். கடைசியாக 2022ல் அடிலெய்டில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான 'டி-20' உலக கோப்பையில் விளையாடினார். ஐ.பி.எல்., அரங்கில் டில்லி, பஞ்சாப், மும்பை, குஜராத், கோல்கட்டா அணிகளுக்காக விளையாடிய இவர், கடைசியாக 17வது சீசனில் பெங்களூரு அணி சார்பில் பங்கேற்றார். தேசிய அணியில் இடம் கிடைக்காததால் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று, தனது 39வது பிறந்த நாள் கொண்டாடிய தினேஷ் கார்த்திக், அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தார். இதுகுறித்து கார்த்திக் வெளியிட்ட செய்தியில், ''ஓய்வு முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். எனது கிரிக்கெட் பயணத்தில் பங்கேற்ற பயிற்சியாளர், தேர்வு குழுவினர், கேப்டன், சக வீரர்களுக்கு நன்றி,'' என்றார்.
சர்வதேச அறிமுகம்
ஒருநாள்: 2004, செப். 5, எதிர்: இங்கிலாந்து, இடம்: லார்ட்ஸ், லண்டன்
டெஸ்ட்: 2004, நவ. 3-5, எதிர்: ஆஸி., இடம்: வான்கடே, மும்பை
'டி-20': 2006, டிச. 1, எதிர்: தென் ஆப்ரிக்கா, இடம்: ஜோகனஸ்பர்க்
சர்வதேச செயற்பாடு
டெஸ்ட்: 26 போட்டி, 1025 ரன், ஒரு சதம், 7 அரைசதம்
ஒருநாள்: 94 போட்டி, 1752 ரன், 9 அரைசதம்
'டி-20': 60 போட்டி, 686 ரன், ஒரு அரைசதம்
வென்ற கோப்பை
'டி-20' உலக கோப்பை: 2007
சாம்பியன்ஸ் டிராபி: 2013
ஆசிய கோப்பை: 2010, 2018