/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மதுரை அணிக்கு முதல் வெற்றி: கோவை அணி ஏமாற்றம்
/
மதுரை அணிக்கு முதல் வெற்றி: கோவை அணி ஏமாற்றம்
ADDED : ஜூன் 11, 2025 11:00 PM

கோவை: ராம் அரவிந்த் அரைசதம் விளாச, மதுரை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோவை அணி ஏமாற்றியது.
கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி மைதானத்தில் நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் கோவை, மதுரை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மதுரை அணி கேப்டன் சதுர்வேத் 'பவுலிங்' தேர்வு செய்தார்.
கோவை அணிக்கு ஜிதேந்திர குமார் (17), சுரேஷ் லோகேஷ்வர் (20) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. பாலசுப்ரமணியம் சச்சின் (15), ஆன்ட்ரி சித்தார்த் (20) நிலைக்கவில்லை. சூர்யா ஆனந்த் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஷாருக்கான், 38 பந்தில் அரைசதம் கடந்தார். சூர்யா ஆனந்த் பந்தில் தொடர்ச்சியாக 2 சிக்சர் பறக்கவிட்ட ஷாருக்கான், குர்ஜப்னீத் வீசிய கடைசி ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி விரட்டினார்.
கோவை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 169 ரன் எடுத்தது. ஷாருக்கான் (77), பிரதீப் விஷால் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய மதுரை அணிக்கு ராம் அரவிந்த், பாலசந்தர் அனிருத் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 88 ரன் சேர்த்த போது ஷாருக்கான் 'வேகத்தில்' அனிருத் (37) போல்டானார். பொறுப்பாக ஆடிய ராம் அரவிந்த், 40 பந்தில் அரைசதம் எட்டினார். சுப்ரமணியன் வீசிய 13வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார் கேப்டன் சதுர்வேத். கபிலன் பந்தில் அரவிந்த் (64) அவுட்டானார். அதீக் (7) 'ரன்-அவுட்' ஆனார். ஷாருக்கான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய சதுர்வேத் வெற்றியை உறுதி செய்தார்.
மதுரை அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 171 ரன் எடுத்து, இத்தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யது. சதுர்வேத் (46), சரத் குமார் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.