ADDED : ஜூன் 13, 2025 11:22 PM

புதுடில்லி: தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால், பயிற்சியாளர் காம்பிர் அவசரமாக டில்லி திரும்பினார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஜூன் 20ல் லீட்சில் துவங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணி தலைமை பயிற்சியாளர் காம்பிர், சொந்த காரணங்களுக்காக தாயகம் திரும்பினார்.
இது குறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''இரண்டு நாளுக்கு முன் காம்பிர் தாயார் சீமாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. டில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது. இதை அறிந்த காம்பிர் அவசரமாக இங்கிலாந்தில் இருந்து டில்லி திரும்பினார். எல்லாம் சரியாக அமைந்தால், லீட்ஸ் டெஸ்ட் போட்டிக்கு முன் மீண்டும் இங்கிலாந்து செல்வார். இவர் இல்லாத நிலையில், துணை பயிற்சியாளர் ரியான் டென்டஸ்காட்டே வசம் பொறுப்பு ஒப்படைக்கப்படும். இந்தியா, இந்தியா 'ஏ' இடையிலான பயிற்சி போட்டியை கண்காணிப்பார். இந்திய வீரர்களுக்கு உதவ, சிதான்ஷு கோடக் (பேட்டிங்), மார்னே மார்கல் (பவுலிங்), திலிப் (பீல்டிங்) உள்ளிட்ட பயிற்சியாளர் குழுவினரும் உள்ளனர்,'' என்றார்.