/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சுப்மன் கில் இரட்டை சதம்: இந்திய அணி ரன் குவிப்பு
/
சுப்மன் கில் இரட்டை சதம்: இந்திய அணி ரன் குவிப்பு
ADDED : ஜூலை 03, 2025 11:24 PM

பர்மிங்ஹாம்: இரண்டாவது டெஸ்டில் இந்திய கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசினார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன்-சச்சின் டிராபி') பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் பர்மிங்ஹாமில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 310/5 ரன் எடுத்திருந்தது. சுப்மன் கில் (114), ஜடேஜா (41) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஜடேஜா அபாரம்: இரண்டாம் நாள் ஆட்டத்தில் வோக்ஸ் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ஜடேஜா. டெஸ்ட் அரங்கில் தனது 23வது அரைசதத்தை பதிவு செய்த ஜடேஜா, ஸ்டோக்ஸ் வீசிய 92வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி அடித்தார். பஷிர் வீசிய 107வது ஓவரில் ஜடேஜா, கில் தலா ஒரு சிக்சர் விளாச 13 ரன் கிடைத்தது. ஆறாவது விக்கெட்டுக்கு 203 ரன் சேர்த்த போது ஜோஷ் டங் வீசிய 'பவுன்சரில்' ஜடேஜா (89) ஆட்டமிழந்தார்.
கில் கலக்கல்: அடுத்து வந்த தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர், ஜோஷ் டங் வீசிய 120வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். மறுமுனையில் அசத்திய சுப்மன் கில், டெஸ்ட் அரங்கில் முதன்முறையாக இரட்டை சதத்தை பதிவு செய்தார். பஷிர் பந்தில் வரிசையாக 2 பவுண்டரி அடித்த கில், புரூக் வீசிய 125வது ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி விரட்டினார். புரூக் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கில், 250 ரன்னை எட்டினார்.
ஏழாவது விக்கெட்டுக்கு 144 ரன் சேர்த்த போது ஜோ ரூட் 'சுழலில்' வாஷிங்டன் சுந்தர் (42) போல்டானார். அபாரமாக ஆடிய சுப்மன் கில் (269 ரன், 387 பந்து, 3x6, 30x4), ஜோஷ் டங் 'வேகத்தில்' வெளியேறினார். பஷிர் 'சுழலில்' ஆகாஷ் தீப் (6), முகமது சிராஜ் (8) சிக்கினர்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பிரசித் கிருஷ்ணா (5) அவுட்டாகாமல் இருந்தார்.
ஆகாஷ் அசத்தல்: பின் முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி தடுமாறியது. ஆகாஷ் தீப் 'வேகத்தில்' டக்கெட் (0), போப் (0) வெளியேறினர். சிராஜ் பந்தில் கிராலே (19) அவுட்டானார். பின் இணைந்த ஜோ ரூட், ஹாரி புரூக் ஜோடி நிதானமாக ஆடியது.
ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 77/3 ரன் எடுத்திருந்தது. ஜோ ரூட் (18), ஹாரி புரூக் (30) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட் கைப்பற்றினார்.
மூன்றாவது ஜோடி
ஆறாவது விக்கெட்டுக்கு சுப்மன், ஜடேஜா ஜோடி 203 ரன் சேர்த்தது. இங்கிலாந்து மண்ணில் பேட்டிங் வரிசையில் 6வது அல்லது அதற்கு கீழான இடத்தில் களமிறங்கி அதிக ரன் சேர்த்த 3வது இந்திய ஜோடியானது. முதலிரண்டு இடங்களில் பன்ட்-ஜடேஜா (222 ரன், பர்மிங்காம், 2022), பன்ட்-ராகுல் (204 ரன், லண்டன், ஓவல், 2018) ஜோடி உள்ளன.
சாதனை கேப்டன்
இந்தியாவின் சுப்மன் கில் (269), இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதம் விளாசிய முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன், 2011ல் நடந்த லார்ட்ஸ் டெஸ்டில் இலங்கை கேப்டன் தில்ஷன் 193 ரன் எடுத்தது அதிகபட்சமாக இருந்தது.
* இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் இன்னிங்சில் அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் பட்டியலில் முதலிடம் பிடித்தார் சுப்மன் கில். இதற்கு முன், முகமது அசார் 179 ரன் (1990, மான்செஸ்டர்) எடுத்திருந்தார்.
* 'சேனா' நாடுகள் என்று அழைக்கப்படும் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக ஒரு டெஸ்ட் இன்னிங்சில் அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் என்ற சாதனை படைத்தார் சுப்மன் கில். இதற்கு முன் முகமது அசார் (192 ரன், எதிர்: நியூசிலாந்து, 1990, இடம்: ஆக்லாந்து) இருந்தார்.
* டெஸ்ட் அரங்கில் இரட்டை சதம் விளாசிய 6வது இந்திய கேப்டன் என்ற பெருமை பெற்றார் கில். ஏற்கனவே பட்டோடி, கவாஸ்கர், சச்சின், தோனி, கோலி இம்மைல்கல்லை எட்டியிருந்தனர். இதில் கோலி 7 முறை இரட்டை சதமடித்தார். மற்றவர்கள் தலா ஒரு முறை அடித்தனர்.
* அன்னிய மண்ணில் இரட்டை சதம் விளாசிய 2வது இந்திய கேப்டன் ஆனார் கில். ஏற்கனவே கோலி (200 ரன், எதிர்: வெஸ்ட் இண்டீஸ், 2016, இடம்: நார்த் சவுண்ட்) சாதித்திருந்தார்.
* இளம் வயதில் இரட்டை சதமடித்த இந்திய கேப்டன் பட்டியலில் 2வது இடம் பிடித்தார் கில் (25 ஆண்டு, 298 நாள்). முதலிடத்தில் பட்டோடி (23 ஆண்டு, 39 நாள், 1964, எதிர்: இங்கிலாந்து, இடம்: டில்லி) உள்ளார்.
கவாஸ்கரை முந்தினார்
இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் இன்னிங்சில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் வரிசையில் ஜாம்பவான் கவாஸ்கரை (221 ரன், லண்டன், ஓவல், 1979) முந்தி முதலிடம் பிடித்தார் சுப்மன் கில்.
* இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதம் விளாசிய 3வது இந்திய வீரரானார் சுப்மன் கில். ஏற்கனவே கவாஸ்கர் (221 ரன், இடம்: ஓவல், லண்டன், 1979), டிராவிட் (217 ரன், இடம்: ஓவல், லண்டன், 2002) இச்சாதனை படைத்திருந்தனர்.
ஆறாவது வீரர்
டெஸ்ட் அரங்கில், ஒரு இன்னிங்சில் 250 ரன்னுக்கு மேல் விளாசிய 6வது இந்திய வீரரானார் கில். ஏற்கனவே சேவக் (4 முறை), லட்சுமண், டிராவிட், கருண் நாயர், கோலி (தலா ஒரு முறை) இப்படி அசத்தினர்.
கோலியை முந்தினார்
டெஸ்ட் அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் (269) எடுத்த இந்திய கேப்டன் என்ற சாதனை படைத்தார் சுப்மன் கில். இதற்கு முன் விராத் கோலி 254* ரன் (எதிர்: தென் ஆப்ரிக்கா, 2019, இடம்: புனே) எடுத்தது அதிகபட்சமாக இருந்தது.