/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
கதை கதையாம் காரணமாம்: கபடி வர்ணனை ரகசியம்
/
கதை கதையாம் காரணமாம்: கபடி வர்ணனை ரகசியம்
ADDED : செப் 22, 2025 11:02 PM

ஜெய்ப்பூர்: கபடி வீரர்களின் ஆக்ரோஷ ஆட்டத்தை, அதே ஆவேசத்துடன் வர்ணிக்கும் போது, ரசிகர்கள் உணர்ச்சி பொங்க ஆர்ப்பரிக்கின்றனர். 8 மொழியில் வர்ணனை செய்யப்படுவதால், வரவேற்பு அதிகரித்துள்ளது.
புரோ கபடி லீக் தொடரின் 12வது சீசன் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் 'ரைவல்ரி வீக்' என விறுவிறுப்பாக நடக்கிறது. போட்டியின் ஒவ்வொரு தருணத்தையும் தத்ரூபமாக வர்ணிக்கின்றனர். இதன் ரகசியம் குறித்து 'ஜியோ ஸ்டார்' விளையாட்டு பிரிவின்
பார்வையாளர், வருவாய் மேம்பாட்டு தலைவர் சித்தார்த் சர்மா கூறியது:புரோ கபடி போட்டியுடன் ரசிகர்கள் பயணிக்கின்றனர். வீரர்கள் 'ரெய்டு' செல்லும் போது, என்ன நடக்குமோ என பதட்டத்துடன் காணப்படுகின்றனர். இவர்களது உணர்வுகளை வர்ணனையாளர்கள் பிரதிபலிக்க வேண்டும். குழந்தை பருவத்தில் நம் பாட்டி சொல்லும் கதைகளை கண் அசராமல் கேட்டோம். இதே போன்று கதை சொல்லும் திறமை வாய்ந்தவர்களை வர்ணனையாளர்களாக தேர்வு செய்கிறோம். இவர்களும் சுவாரஸ்யமாக வர்ணிக்கின்றனர். முன்பு ஆங்கிலம், ஹிந்தி என இரு மொழியில் தான் வர்ணனை இருந்தது. தற்போது தமிழ், தெலுங்கு, போஜ்புரி உட்பட 8 மொழிகளில் முதல் முறையாக வர்ணனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சீசனைவிட இம்முறை பார்வையாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
பலத்த போட்டி: 'டக் அவுட்' கேமரா மூலம் இரு அணிகளின் பகுதிகளில் நடக்கும் விவாதங்கள், பயிற்சியாளர்களின் உணர்ச்சிகள், வியூகங்கள் காண்பிக்கப்படுகின்றன. இம்முறை போட்டி கடுமையாக இருப்பதால், வெற்றி வித்தியாசம் குறைவாக உள்ளது. தோல்வியின் பிடியில் இருந்து பல அணிகள் மீண்டு வருகின்றன. முதல் 28 போட்டிகளில் 50 சதவீத முடிவு 5 அல்லது அதற்கு குறைவான புள்ளிகளில் அமைந்தன. வீரர்கள் தாக்குதல் பாணியில் விளையாடுவதால், அனல் பறக்கும் ஆட்டங்களை தொடர்ந்து எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
'டேன்ஸ் கேம்'
புரோ கபடி போட்டியின் இடைவேளையில், அரங்கம் அதிர பாடல் ஒலிக்கப்படுகிறது. இதற்கு ஏற்ப 'கேலரி'யில் இருக்கும் ரசிகர்கள் துள்ளல் நடனமாடுகின்றனர். இதை கேமரா 'கண்கள்' பதிவு செய்கின்றன. உடனே 'டேன்ஸ் கேம்' என்ற பெயரில் 'மெகா ஸ்கிரீனில்' காண்பிக்கப்பட, தங்கள் ஆட்டத்தை திரையில் பார்த்து மகிழ்கின்றனர்.

